

உலக கோப்பை டி20 போட்டியின் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 186 ரன்களை சேர்த்தது இந்திய அணி. 187 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள் சேர்ந்த இந்த இணையை முசரபானி பிரிக்க ரோஹித் சர்மா 15 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்த விராட் கோலி - கே.எல்.ராகுலுடன் கைகோத்து அணியின் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கே.எல்.ராகுல் அதிரடி காட்டிக்கொண்டிருந்தபோது, 12-வது ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி 26 ரன்களுடன் களத்திலிருந்து நடையைக்கட்டினார் கோலி. அவர் சென்ற சிறிது நேரத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களை குவித்துவிட்டு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 ரன்களில் கிளம்பினார். இதனால் 15 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை சேர்த்திருந்தது.
அவர்களைத்தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்ட்யா - சூர்யகுமார் யாதவ் இணை அணிக்கு பலம் சேர்த்தது. கடைசி ஓவரில் ஹர்திக் 18 பந்துகளில் 18 ரன்களை சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 186 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களுடனும், அக்சர்படேல் ரன் எதுவும் இல்லாமல் களத்தில் அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் ஷேன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராஜா, ரிச்சர்ட், முசர்பானி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.