அஸ்வின் சுழலில் நியூஸி.யை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

அஸ்வின் சுழலில் நியூஸி.யை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
Updated on
2 min read

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது அபார பந்துவீச்சால் இரண்டாவது இன்னிங்ஸ்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், ஏற்கனவே 2 வெற்றிகளுடன் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

475 வெற்றி இலக்குடன் துவக்க வீரராக களமிறங்கிய லாதம், முதல் ஓவரின் 4-வது பந்தை அதிரடியாக சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். கப்டில் - வில்லியம்சன் ஜோடி தேநீர் இடைவேளையைத் தாண்டி களத்தில் நின்றாலும், இடைவேளை முடிந்த இரண்டாவது ஓவரில் வில்லியம்ஸன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் வில்லியம்ஸன், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழப்பது இது 4-வது முறையாகும்.

அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர், ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் தனது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். ஆனால் அவரும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று ஸ்டம்பை இழந்தார். 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கப்டில் மட்டுமே நியூஸி. அணிக்கு சிறிது ஆறுதல் அளித்தார்.

ரான்க்கி 15 ரன்கள், நீஷம் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் கப்டிலும் 29 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். அடுத்த சில ஓவர்களில் சாண்ட்னர் 14 ரன்களுக்கு அஸ்வினின் ஆஃப் ஸ்பின் பந்தில் பெவிலியின் திரும்பினார். அஸ்வினின் அடுத்த ஓவரிலேயே, புதிய வீரர் படேல், பந்தை ஸ்வீப் செய்ய முயல, பந்து மட்டையில் படாமல் ஸ்டம்பை தாக்கியது.

அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்பைத் தாண்டி வந்த பந்தை தூக்கி அடிக்க முயன்ற ஹென்றி, மிட் ஆஃப் பகுதியில் இருக்கும் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், பவுல்டும் 4 ரன்கள் எடுத்த நிலையில், பந்து வீசிய அஸ்வினிடமே கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் சேர்த்து மொத்தம் இந்த ஆட்டத்தில் அஸ்வின் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் 3-0 என்ற கணக்கில் இந்தத் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது.

வாட்லிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்திருந்தார். 475 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 153 ரன்களே எடுத்து 321 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

புஜாரா சதம், காம்பீர் அரை சதம்

முன்னதாக 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் முரளி விஜய் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். நேற்று தோள்பட்டை காயத்தால் ஆடமுடியாமல் வெளியேறிய கவுதம் காம்பீர் அடுத்து களமிறங்கினார். புஜாராவும் காம்பீரும் சீரான வேகத்தில் ரன் சேர்க்க, இந்தியாவின் 2-வது இன்னிங்ஸ் ரன் முன்னிலையும் உயர்ந்தது.

காம்பீர் 54 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே படேல் பந்தில் ஆட்டமிழந்தார். காம்பீரும் - புஜாராவும் பார்ட்னர்ஷிப்பில் 76 ரன்களை சேர்த்திருந்தனர். அடுத்து கோலி களமிறங்க, மறுமுனையில் புஜாரா தனது அரை சதத்தை எட்டினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 4-வது அரை சதம் இது. உணவு இடைவேளையின் போது இந்தியா 127 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இடைவேளைக்குப் பிறகு இந்தியா தனது முன்னணியை 400 ரன்களைத் தாண்டி எடுத்துச் சென்றது. முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் எடுத்த கோலி இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஹானே புஜாராவுடன் இணைய இருவரும் நியூஸிலாந்தின் பந்துவீச்சை சோதிக்க ஆரம்பித்தனர்.

147 பந்துகளில் புஜாரா தனது சதத்தைக் கடந்தார். அந்த ஓவர் முடிந்ததும் இந்தியா டிக்ளர் செய்வதாக அறிவிக்க நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 475 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ரஹானே ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 216 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in