Published : 04 Nov 2022 12:52 PM
Last Updated : 04 Nov 2022 12:52 PM

T20 WC | ரிஷப் பந்த்தை உட்கார வைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்வது முட்டாள்தனம்: இயன் சாப்பல்

இயன் சாப்பல், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் | கோப்புப்படம்

நடப்பு டி20 உலகக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் ரிஷப் பந்த் தான் விளையாடி இருக்க வேண்டும். இவரை உட்கார வைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை ஆட வைப்பது முட்டாள்தனமானது என்று ஆஸ்திரேலிய கிரக்கெட் அணியின் ஜாம்பவானான இயன் சாப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேச அணிகளை வீழ்த்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் பேட்டிங் பலவீனத்தை வெளிக்காட்டித் தோல்வி அடைந்தது. ஆனால், அட்டவணையில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாலும் தென் ஆப்பிரிக்காவிடம் பேட்டிங்கில் சொதப்பியதும், வங்கதேச அணிக்கு எதிராக ஷமி உட்பட சிலர் பவுலிங்கில் சொதப்பியதும் இந்திய அணியின் பலவீனங்களை அரையிறுதிக்கு முன்னதாக அம்பலப்படுத்தியுள்ளது.

கே.எல்.ராகுல் 3 ஆட்டங்களில் சொதப்பி கடைசியில் வங்கதேசத்துக்கு எதிராக ஃபார்முக்கு வந்தார். இவருக்காக ரிஷப் பந்த் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இயன் சாப்பல் என்ன கூறுகிறார் எனில், ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள் தனம் என்றும், ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் ஆட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராகுல், தினேஷ் கார்த்திக்கை நீக்காவிட்டாலும் அக்சர் படேல் என்பவரை அணியில் எடுத்து வெறும் சில ஓவர்கள் கொடுப்பதற்கு பதில் ரிஷப் பந்த்தை அணியில் எடுக்கலாமே. அல்லது தீபக் ஹூடாவை எடுத்து அந்தப் பிட்ச்களில் அவரது நம்பிக்கையை காலி செய்வதற்குப் பதிலாக ஆஸ்திரேலியாவில் ஆடிய அனுபவம் பெற்ற ரிஷப் பந்த்தை அணியில் எடுக்க வேண்டும். ஏதாவது ஒரு ஸ்லாட்டில் அவரது ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் பயனளிக்கும் என்பது அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

இந்நிலையில், இயன் சாப்பல் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூறும்போது, “டிம் டேவிட் சர்வதேச அளவில் என்ன செய்து விட்டார்? சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் ஃபார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தியா, அவர்கள் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கின்றனர். இது பெரிய முட்டாள்தனம், நான் என்ன சொல்கிறேன் என்றால் ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பேட்டியில் டிம் டேவிட்டை பற்றி கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டில் தனியார் லீகுகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வீசும் பவுலர்களை விளாசுவதை வைத்து சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்தால் அங்கு மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை எப்படி அடிக்க முடியும். அதனால்தான் சில சர்வதேசப் போட்டிகளையாவது ஆடவிட்டு பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை இஷ்டத்துக்கு விளாசுவதெல்லாம் சுலபமானதல்ல என்கிறார் இயன் சாப்பல்.

நடப்பு உலகக் கோப்பையில் மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 பந்தில் 1 ரன், நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவருக்கு நல்ல வாய்ப்புக் கிட்டியது. அவர் இறங்கும்போது இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது 10 ஓவர்கள் மீதமிருந்தன. தினேஷ் கார்த்திக்கிற்கு உண்மையான திறமை இருந்திருந்தால் இந்தப் பிட்சில் 30-35 ரன்கள் எடுத்திருந்தாலே போதும். அதன் மூலம் அணியில் தனது தேர்வு குறித்து அவர் நியாயப்படுத்தியிருப்பார். ஆனால் 15 பந்துகளில் 6 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசியாக வங்கதேசத்திற்கு எதிராக 7 ரன்களில் கோலி ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, இல்லாத ஒரு சிங்கிள் வாய்ப்புக்காக ஓடி, தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இந்த ஸ்கோர்களுக்கு முன்பாகவும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய இன்னிங்ஸ்களை ஆடிவிடவில்லை.

மேலும் ரிஷப் பந்த் தான் ஒரு நிகழ்கால ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார். எதிர்காலக் கேப்டன், உலக பவுலர்கள் நடுங்கும் ஒரு இடது கை ஆட்டக்காரர், மாடர்ன் டே கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா ரக அதிரடி வீரர். அவரை உட்கார வைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை எடுக்கலாமா என்பதுதான் இயன் சாப்பலின் கேள்வியும். அது பல ரசிகர்களின் கேள்வியுமாக கூட இருக்கிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x