Published : 03 Nov 2022 07:40 PM
Last Updated : 03 Nov 2022 07:40 PM

“சாக்குப் போக்குகள் சொன்னால் வளர முடியாது” - கோலி ‘ஃபேக் த்ரோ’ புகாருக்கு ஹர்ஷா போக்ளே பதிலடி

ஹர்ஷா போக்ளே மற்றும் வங்கதேச வீரர்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சர்ச்சைகள் எழுவது கடந்த 2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஆரம்பமானது. அந்தத் தொடரில் வங்கதேச அணி, இந்தியாவை முதல் போட்டியிலேயே அதிரடியாக வீழ்த்தியது. அப்போது முதல் இரு அணிகளும் களத்தில் பலப்பரீட்சை செய்யும் போதெல்லாம் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

கடந்த 2015 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு ஸ்கொயர் லெக்கில் வங்கதேச பீல்டர் எடுத்த கேட்ச்சில் பந்து இடுப்புக்கு மேல் வந்த காரணத்தால் நோ-பால் கொடுத்தது. அதேபோல முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி வங்கதேச மன்னியல் ஒருநாள் தொடரை இழந்தது. அதன் பிறகு தோனி உள்ளிட்டோரை இகழ்ந்து கார்ட்டூன் வரைந்தது வரை வங்கதேச அணி இந்திய அணியுடன் ஒரு புதிய பகைமையை வளர்த்தி வருவதை பார்க்க முடிகிறது.

நேற்று (நவம்பர் 2) அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்து தோல்வியை தழுவியது வங்கதேசம். இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு அதிக மிரட்டலை கொடுத்தது அந்த அணி. ஆனால், அப்படி தோல்வியை தழுவும்போதெல்லாம் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடிப்பதை வங்கதேசம் வழக்கமாகக் கொண்டுள்ளதை பார்த்து வருகிறோம்.

நேற்றைய போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பந்தை த்ரோ செய்வது போல் பாவனை செய்தாராம். அதுதான் வங்கதேசத்தின் அண்மைய குற்றச்சாட்டு. ‘இது ஏமாற்றும் செயல்’, ஐசிசி விதிகளின் படி 5 ரன்களை தங்களுக்குக் கொடுத்திருந்தால் வென்றிருப்போம், நடுவர்கள் இதை கவனிக்கவே இல்லை” என அந்த அணியின் பேட்ஸ்மேன் நூருல் ஹசன் புகார் எழுப்பியது, சமூக ஊடகங்களில் வைரலாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

தங்கள் அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வரவேண்டும். அப்படி ஃபேக் த்ரோவை நடுவர் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் தோல்விக்குக் காரணம் என்று நூருல் ஹசன் கூறியுள்ளது சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. இந்நிலையில், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது வங்கதேச அணி இப்படி சாக்குப் போக்கு சொன்னால் வளரவே முடியாது என்று சாடியுள்ளார்.

ஹர்ஷா போக்ளே சொன்னது இதுதான்... - “ஃபேக் பீல்டிங் சம்பவத்தைப் பொறுத்தவரை உண்மை என்னவெனில் யாருமே அதைப் பார்க்கவில்லை. நடுவர்கள் பார்க்கவில்லை. களத்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தவர்களும் பார்க்கவில்லை. வர்ணனையாளர்களான நாங்களும் பார்க்கவில்லை. ஐசிசி விதி 41.5 ஃபேக் பீல்டிங்கிற்கான அபராத விதிமுறையை வைத்துள்ளது. ஆனால் நடுவர் அதை அப்படி விளக்கமளித்தால்தான் அது செல்லுபடியாகும். முழுக்க முழுக்க நடுவர் அதை ஃபேக் த்ரோ என்று ஐயம் திரிபற உறுதி செய்ய வேண்டும். யாரும் பார்க்கவில்லை, என்ன செய்ய முடியும்?

மைதானம் ஈரமாக இருந்தது என்று யாரும் புகார் அளிக்க முடியாது. பேட்டிங் அணிக்கு அது சாதகம் என்று ஷாகிப் கூறினார். அதுசரிதான். போட்டி நடத்த சாத்தியமே இல்லை என்று ஆகும் வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த சாத்தியமிருந்தால் நடத்தித்தான் ஆகவேண்டும். நடுவர்களும் மைதான பராமரிப்பாளர்களும் அதை நன்றாகவே கையாண்டதாக நான் கருதுகிறேன்.

ஆகவே, வங்கதேசத்தில் இருக்கும் என் நண்பர்களுக்கு கூறுகிறேன், ஃபேக் பீல்டிங், மைதானம் ஈரமாகி பேட்டிங் அணிக்கு சாதகமானது என்றெல்லாம் காரணம் கூறி இதுதான் இலக்கை எட்ட முடியாததற்குக் காரணம் என்று கூறாதீர்கள். ஒரு பேட்டர் ஒரு முனையில் நின்றிருந்தால் கூட வங்கதேசம் வென்றிருக்கும். நாம் சாக்குப் போக்குகள் கூறினால் வளர முடியாது” என ஹர்ஷா போக்ளே தொடர் ட்வீட்களில் வங்கதேசத்தை சாடியுள்ளார்.

வங்கதேசம் - இந்தியாவுக்கு இடையே கிரிக்கெட்டில் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்தப் புதிய பகையுறவு வங்கதேச அணியை மனம் திறந்து பாராட்டும் இந்திய ரசிகர்களையும் இழப்பதிலேயே போய் முடியும். இப்படித்தான் இலங்கையை வெற்றி பெறும்போதெல்லாம் கேலி செய்யும் விதமாக நாகினி டான்ஸ் ஆடி இலங்கை ரசிகர்களை இழந்தது வங்கதேசம். ஆகவே, கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை கருத்தில் கொண்டு தங்கள் அணியை எங்கு மேம்படுத்துவது என்பதை கவனித்தால்தான் முன்னேற முடியும். இதைத்தான் ஹர்ஷா போக்ளேவும் கூற வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x