Published : 02 Nov 2022 08:43 PM
Last Updated : 02 Nov 2022 08:43 PM

T20 WC அலசல் | கவலைக்குரிய இந்தியப் பந்துவீச்சு... கதறவிட்ட லிட்டன் தாஸ்... ராகுலின் மேட்ச் வின்னிங் ரன் அவுட்!

அடிலெய்டில் நடைபெற்ற இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டியில் மழை குறுக்கிட, பரபரப்பாக முடிந்த போட்டியில் வங்கதேசம் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தியது. இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6 புள்ளிகள் மற்றும் 0.730 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது இந்திய அணி.

இந்தப் போட்டியில் வங்கதேசம், மழைக் குறுக்கீட்டுக்கு முன்னால் லிட்டன் தாஸின் காட்டடி அரைசதத்தின் மூலம் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, வங்கதேசம் 49 எடுத்திருந்தால் போதும். ஆனால் 66 ரன்கள் என்று 17 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மழை வந்தவுடன் இந்திய வீரர்கள், ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

மழை தொடர்ந்திருந்தால் இந்தியா அதிர்ச்சித் தோல்வி அடைந்திருக்கும். மழையே பெய்யாமல் முழு ஆட்டம் நடந்திருந்தால் வங்கதேசம் ஒருவேளை வென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், மழை குறுக்கிட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, எந்த ஒரு அணிக்குமே ஒரு பிரேக் உத்வேகத்தைக் கெடுத்துவிடும், அதுதான் வங்கதேசத்துக்கு நடந்தது. இந்திய அணிக்கு ஒரு அதிர்ஷ்டகர வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன். இது ஏன் என்று அப்போது புரியவில்லை. ஆனால், பிற்பாடு தெரிந்தது பிட்ச் இரண்டாவதாக பேட் செய்யும் போது அருமையான பேட்டிங் பிட்ச் ஆக இருக்கும் என்பது. ராகுல் 32 பந்துகளில் 3 பவுண்டரி 4 அருமையான சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுக்க, கிங் கோலியின் உலகக்கோப்பை இது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்ப 8 பவுண்டரிகள் மற்றும் கடைசியில் சச்சின் டெண்டுல்கர் பாணியில், நேராக ஒரே தூக்குத் தூக்கி அடித்த கண்ணில் நிற்கும் சிக்ஸ் மூலம் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

சூரியகுமார் யாதவ்வை கட்டுப்படுத்த யாரால் முடியும்?.. இன்றும் வந்தார். 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் என்று விளாசி விட்டுச் சென்றார். ராகுலையும், சூரியகுமார் யாதவையும், ஷாகிப் அல் ஹசன் வீழ்த்தினார். தொடக்கத்தில் டஸ்கின் அகமது, அதியற்புதமாக ஸ்விங் செய்து ரோஹித் சர்மா, ராகுல் இருவரையும் ஆட்டிப்படைத்தார். ரோஹித் சர்மா 2 ரன்கள் எடுப்பதற்குள் ஒரு லைஃபையும் பெற்றார்.

ஃபுல் ஷாட் சரியாக ஆடாமல் அவர் அடித்த பந்து நேராக, லெக் திசையில் டீப்பில் ஹசன் மஹமூத் கையில் போய் உட்கார்ந்தது அப்படியே நழுவ விட்டார். ஆனால், ஷாகிப் அல் ஹசன் அங்குதான் தோனி போல ஒரு கேப்டன்சி நகர்வை மேற்கொண்டார். யார் கேட்ச் விட்டாரோ அவரிடமே பவுலிங்கைக் கொடுக்க, அவர் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். ரோஹித் மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்தை அப்பர் கட் செய்கிறேன் என்று, போதிய இடம் அவருக்குக் கிடைக்கவில்லை. அருகிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ராகுலும், கோலியும் இணைந்து அடுத்த 6 ஓவர்களில் 67 ரன்களைச் சேர்த்தனர். பவர் ப்ளேயில் 6 ஓவர்களில் 37/1 என்று தவித்துக் கொண்டிருந்த இந்திய அணியை ராகுலும் கோலியும் மீட்டனர். கோலி வந்தவுடன் 3 எட்ஜ் பவுண்டரிகளில், அதிர்ஷ்டகரமாகத் தொடங்கினார். ஆனால், அதன் பிறகு இரண்டு நேர் டரைவ்கள், ஒரு ராஜகவர் ட்ரைவ், ஃபுல் ஷாட் என்று தன் அடிப்படை கூறுகளுக்குத் திரும்பினார்.

இருவரும் சேர்ந்து ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் ஓவர்களை விளாசினர். கடைசியில் ராகுல் டி20 உலகக்கோப்பையில் தன் முதல் அரைசதம் எடுத்து ஃபைன் லெக்கில் தூக்கிவிடப்பார்த்து கேட்ச் ஆனார். சூரியகுமார் யாதவ் இறங்கி, ரன் ரேட்டை இறங்காமல் கொண்டு சென்றார். 4 பவுண்டரிகளை விளாசி 16 பந்தில் 30 ரன்கள் என்று இருந்த போது ஷாகிப் அல் ஹசன் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்கப்போய் பவுல்டு ஆனார்.

ஹர்திக் பாண்டியா சுத்த வேஸ்ட் ஆகிக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் போட்டியில் ஆடியதோடு சரி, இந்தப் போட்டியில் 5 ரன்கள் எடுத்து பாயிண்டில் தூக்கிக் கையில் கொடுத்து விட்டு அவுட் ஆகிச்சென்றார். தினேஷ் கார்த்திக் ஹனிமூன் முடிந்து விட்டது என்றே கூற வேண்டும். கோலி ஒருஷாட்டை வேகமாக அடிக்க, அது வேகமாக கவர் பீல்டருக்குச் சென்றது. அங்கு ரன்னே இல்லை. அதிவேகமாக ஓடி கோலி பார்க்கும் போது முக்கால் மேட்டிற்கு அவர் வந்திருந்தார். திரும்ப முடியவில்லை ரன் அவுட் ஆனார்.

கோலியிடம் ஏதோ பேசினார், ஆனால் கோலி இதுக்கு போய் ஓடலாமா என்பது போல் செய்கை செய்தது தெரிந்தது. அக்சர் படேல் 1 பவுண்டரி அடித்தார். அஸ்வின் ஒரு பவுண்டரியும் கடைசியில் அற்புதமாக ஒரு புல்ஷாட்டில் சிக்சரும், விளாசி 6 பந்தில் 13 ரன்கள் எடுக்க, இந்தியா கோலியின் உதவியுடன் 184/6 என்ற ஸ்கோரை எட்டியது.

இந்திய பவுலர்களை கதறவிட்ட லிட்டன் தாஸின் அபார அதிரடியும் மழைக் குறுக்கீட்டால் காணாமல் போன உத்வேகமும்: 185 ரன்களை வங்கதேசம் எங்கே சேஸ் செய்யப்போகிறார்கள். ஏனெனில் இதுவரை அதற்கான எந்த ஒரு ஆட்டத்தையும் இந்த உலகக் கோப்பையில் வெளிப்படுத்தவில்லையே என்று நினைக்கும் வேளையில்தான் ஷாகிப் அல் ஹசன் லிட்டன் தாஸ் என்ற அதிரடி வீரரை தொடக்கத்தில் களமிறக்கினார். லிட்டன் தாஸுக்கு 2 கேட்சை விட்டார் தினேஷ் கார்த்திக் அதில் ஒன்று தரையில் பட்டு எடுத்து விட்டு சொல்லாமல் நின்றார், ரீப்ளேயில் தெரிந்தது. அடுத்த கேட்ச் கொஞ்சம் கடினமானது.

அவர் இந்திய அணியின் இந்தத் தொடரின் சிறந்த பவுலரான அர்ஷ்தீப் சிங்கை 3 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். பிறகு புவனேஷ்வர் குமாரை 2 பவுண்டரி 2 அற்புத சிக்சர் விளாசி அதிர்ச்சியளித்தார். சரி இவர்கள்தான் அடி வாங்குகின்றனர் என்று ஷமியைக் கொண்டு வந்தால் சரியாகி விடும் என்று பார்த்தால் 2, 3 என்று அடித்த லிட்டன் தாஸ், ஷமியின் 2வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி விளாசினார்.

அடுத்து இறங்கி வந்து ஸ்பின்னரை அடிப்பது போல் ஒரே தூக்குத் தூக்கினார். டீப் ஸ்கொயர்லெக்கில் இரண்டாவது அடுக்கில் போய் விழுந்தது பந்து! அடுத்த பந்தும் இறங்கி வந்து ஆஃப் சைடில் ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ராகவரில் அதியற்புத பவுண்டரியை விளாசி அதிர்ச்சியளித்தார் லிட்டன் தாஸ். ஷமி 2 ஓவர் 21, புவனேஷ்வர் குமார் 2 ஓவர் 27, அர்ஷ்தீப் சிங் ஒரு ஓவர் 12 என்று படையல் நடந்தது. 6 ஓவர்களில் 60/0. 7-வது ஓவரில் 66 எனும்போதுதான் மழை குறுக்கிட்டது. 45 நிமிடங்கள் கழித்து மழை நின்று தொடங்கும் போது வங்கதேசத்துக்கு இலக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது. அதாவது மீதமுள்ள 9 ஓவர்களில் 85 ரன்கள் என்று மாறிப்போனது.

கே.எல்.ராகுலின் மேட்ச் டர்னிங் ரன் அவுட்: ஆட்டம் தொடங்கியவுடன் அஸ்வின் தன் ஓவரை வீசினார். 2-வது பந்தில்தான் அந்தத் தரமான சம்பவம் நடந்தது. அஸ்வின் வீசிய பந்தை ஷாண்ட்டோ மிட் விக்கெட்டில் அடிக்க ராகுல் அங்கு வெகு வேகமாக நகர்ந்து வந்தார். அதற்குள் 2 ரன்களை எடுத்துவிடலாம் என்று லிட்டன் தாஸ் திரும்பி வரும்போது, ஓடுபாதையில் மழை காரணமாக கொஞ்சம் வழுக்கி, கொஞ்சம் நிலைதடுமாறி அவர் ஓடி வந்தார்.

ஆனால், அதற்குள் மிட்விக்கெடிலிருந்து ஸ்டம்பை நோக்கி நேராக அடித்தார் ராகுல். உண்மையில் மேட்ச்சையே புரட்டிப் போட்ட ரன் அவுட் இது. லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்து ஒரு கலக்கு கலக்கி விட்டு, இந்திய பவுலிங்கை அம்பலப்படுத்தி விட்டு சென்றார். அதன் பிறகு இந்தியா சரியாக ஆக்ரோஷத்தைக் காட்டி ஆடியதில் வங்கதேசம் 6 விக்கெட்டுகளை 33 பந்துகளில் 40 ரன்களுக்கு இழந்தது. நுருல் ஹசன் கடைசியில் மிரட்டினார். 14 பந்துகளில் அவர் 25 ரன்கள் விளாசி கடைசி ஓவரை த்ரில் ஆக்கினார்.

ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் பந்து வீச்சு சரியாக இல்லை. சாத்து வாங்குவார் போலத்தான் வீசினார். 3 ஓவர்களில் 28 ரன்கள் என்பது இந்தப் போட்டியின் ரன் விகிதத்தில் அதிகம்தான். கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவை எனும்போது ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்களைக் கொடுத்தார்.

கடைசி ஒவரில் 20 ரன்கள் தேவை எனும்போது அர்ஷ்தீப் சிங்கை நுருல் ஹசன் 1 சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் அது போதவில்லை. 5 ரன்களில் இந்தியா போராடி வென்றது. இந்தியா தரப்பில் அர்ஸ்தீப் 2 விக்கெட், ஷமி 1 விக்கெட், பாண்டியா 1 விக்கெட். அஸ்வினும் எடுபடவில்லை, மழை மைதானத்தில் பந்தை பிடிப்பதே கஷ்டம். அதனால் அவர் 2 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தத்தில் இந்தியாவை வெற்றி பெற தண்ணி குடிக்க வைத்தது வங்கதேசம். குறிப்பாக லிட்டன் தாஸ். ஆட்ட நாயகன் வேறு யார்? கிங் கோலிதான்!!


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x