Published : 24 Apr 2014 12:52 PM
Last Updated : 24 Apr 2014 12:52 PM

ஆசிய பாட்மிண்டன்: சிந்து, காஷ்யப் வெற்றி

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப், குருசாய் தத் ஆகியோர் தங்களின் முதல் சுற்றில் வெற்றி கண்டுள்ளனர்.

தென் கொரியாவின் ஜிம்ஜியோன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் உலகின் 10-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து கடும் போராட்டத்துக்குப் பிறகு 21-15, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் சியூங் நகனை தோற்கடித்தார். சிந்து தனது 2-வது சுற்றில் ஜப்பானின் ஹிரோஸ் எரிக்கோவை சந்திக்கிறார். எரிக்கோவுடன் இதுவரை 3 முறை மோதியுள்ள சிந்து அவையனைத்திலும் தோல்வி கண்டுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் காஷ்யப் 21-14, 21-17 என்ற நேர் செட்களில் மலேசியாவின் கோ சூன் ஹுவாட்டை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் விடாப்பிடியாகப் போராடிய குருசாய் தத் 22-20, 23-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் பெட்பிரதாப் கோஷித்தை தோற்கடித்தார். 2-வது சுற்றில் காஷ்யப், சீன தைபேவின் சூ ஜென் ஹாவையும், குருசாய் தத், சீன தைபேவின் வாங் சூ வெய்யையும் சந்திக்கின்றனர்.

அதேநேரத்தில் இந்தியாவின் காந்த் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார். அவர் 7-21, 14-21 என்ற நேர் செட்களில் சீனாவின் மூத்த வீரரான லீ டானிடம் தோல்வி கண்டார். சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய ஸ்ரீகாந்த், இப்போது முதல் சுற்றிலேயே வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-16, 13-21, 20-22 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜுவான் சென்-ஹெக் நெல்சன் வெய் கீட் ஜோடியிடம் தோல்வி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x