

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் கேப்டன் பட்லர், ஹேல்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன் ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹேல்ஸ் மற்றும் கேப்டன் பட்லரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் சேர்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ், 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பட்லர் 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கான்வே மற்றும் ஆலன் பவர்பிளே ஓவர்களுக்குள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருந்தும் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலிப்ஸ் வலுவான கூட்டணி அமைத்தனர். இருவரும் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வில்லியம்சன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். நீஷம் மற்றும் மிட்செல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தனர். பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. அதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
அதோடு அரை இறுதி வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது இங்கிலாந்து அணி. நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது அடுத்த சூப்பர் 12 போட்டியில் வெற்றி பெற்றால் நிச்சயம் அது ஆஸ்திரேலிய அணிக்கு நெட் ரன் ரேட் அடிப்படையில் தலைவலி கொடுக்கலாம். இந்தத் தொடரில் முதல் முறையாக நியூஸிலாந்து அணி தோல்வியை தழுவி உள்ளது.