

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பிடித்த கேட்ச் ஒன்று விவாதப் பொருளாக உள்ளது. அவர் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என தெரிந்ததும் பட்லரிடம் மன்னிப்பு கோரினார். ஆனாலும், ரசிகர்கள் அவரது செயலை விமர்சித்து வருகின்றனர்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அந்த அணி பேட் செய்தபோது ஆறாவது ஓவரை சான்ட்னர் வீசி இருந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து கேப்டன் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முயன்றார்.
இருந்தாலும் அது சரியாக கனெக்ட் ஆகவில்லை. அதைக் கொஞ்சம் முயன்று கேட்ச் எடுத்தார் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன். பந்தை அப்படியே நெஞ்சோடு அணைத்து பிடித்துக் கொண்டார். தொடர்ந்து, தான் அவுட் என எண்ணி பட்லர் நடை கட்ட தொடங்கினார்.
ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளே செய்து பார்த்ததில் பந்து தரையில் விழுந்தது அப்பட்டமாக தெரிந்தது. அதை அறிந்து கொண்டதும் பட்லரிடம் மன்னிப்பு கோரினார் வில்லியம்சன். இருந்தும் கலகலப்பு படத்தில் வரும் சந்தானம் கேட்பாரே ‘அதெப்படி திமங்கலம்’ என்ற தொனியில் ரசிகர்கள் வில்லியம்சன்னை விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டியில் பட்லர் 73 ரன்கள் விளாசி இருந்தார்.