

சவுதாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து எடுத்த 569 ரன்களுக்கு எதிராக இந்தியா 4ஆம் நாளான இன்று 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து 239 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும், ஃபாலோ ஆன் கொடுக்க முடிவெடுக்கவில்லை. இங்கிலாந்து தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடவுள்ளது. மேலும் 161 ரன்களை 40-45 ஓவர்களில் எடுத்து 400 ரன்கள் முன்னிலையுடன் இன்றும் நாளையும் சேர்த்து 130 ஓவர்களை இந்தியாவை விளையாடச் செய்து வெற்றி பெற இங்கிலாந்து நிச்சயம் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
323 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்று துவங்கிய இந்திய அணி இன்று சடுதியில் கேப்டன் தோனி மற்றும் மொகமது ஷமி விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் இழந்தது. ஆண்டர்சன் 53 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
தோனி நேற்றைய அவரது ஸ்கோரான 50 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஆண்டர்சன் வீசிய பவுன்சரை புல் ஆட முயன்றார், பந்து டாப் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் பட்லரிடம் சரணடைந்தது. தோனி ஷாட்டிற்கு எப்பவும் வேகமாகச் செல்வார் ஆனால் இம்முறை மந்தமாகச் சென்றார்.
மொகமட் ஷமி 5 ரன்கள் எடுத்திருந்தபோது ஆண்டர்சன் ஷாட் பிட்ச் ஒன்று உள்ளே வர, ஷமி விலக நினைத்தார், ஆனால் ரிஸ்ட்டை கீழே இறக்கவில்லை, புஜாராவுக்கு ஆனது போலவே கிளவ்வில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது.
இந்திய அணியில் ரஹானே, தோனி அரைசதம் கண்டனர். எக்ஸ்ட்ராவாக 38 ரன்களை இங்கிலாந்து விட்டுக் கொடுத்தும் ஃபாலோ ஆனைத் தவிர்க்கும் ரன் இலக்கை எட்ட முடியவில்லை.
மொயீன் அலியின் லாலிபாப் பந்து வீச்சிற்கு அனாவசியமாக ரஹானே, ரோகித் சர்மா அவுட் ஆனதே இந்தியாவின் இந்த நெருக்கடி மையக்காரணமாக அமைந்தது.
இங்கிலாந்து தொடர்ந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.