T20 WC | ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர் காயம்

T20 WC | ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர் காயம்
Updated on
1 min read

பெர்த்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 சுற்றின் குரூப் பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 15 ரன்களும், ஆக்கர்மேன் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சில் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்களையும், ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

பின்னர் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 13.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது.

தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 39 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அஸம் 4 ரன்களும், பகர் ஸமான் 20 ரன்களும், ஷான் மசூத் 12 ரன்களிலும் வீழ்ந்தனர். இப்திகார் அகமது 6 ரன்களும், ஷதாப் கான் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார்.

ரவுஃப் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர் காயம்: நெதர்லாந்து பேட்டிங்கின்போது பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் வீசிய பந்து, நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடின் கன்னத்தில் பட்டு காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் 6-வது ஓவரை ரவுஃப் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ரவுஃப் ஷார்ட் பாலாக வீசினார். அது ஆடுகளத்தில் பட்டு பவுன்ஸாகி எழும்பிய நிலையில் வந்தது. அதை அடிக்க பாஸ் டி லீட் முயன்றபோது பந்து, அவரை ஏமாற்றி ஹெல்மெட்டைத் தாக்கி கன்னத்தில் பட்டது.

இதையடுத்து பதறிய வீரர்கள் அவர் அருகே ஓடிவந்தனர். ஹெல்மெட்டை எடுத்து பார்த்தபோது பாஸ் டி லீடின் வலது கண்ணுக்குக் கீழே கன்னத்தில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து டாக்டர் வரவழைக்கப்பட்டு அவர் பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நன்றாக உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in