

பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, கோல் போஸ்ட்டில் இருந்து சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்றபடி பந்தை ஷூட் செய்து, அபாரமான லாங்க்-ரேஞ்ச் கோலை பதிவு செய்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பிஎஸ்ஜி அணிக்காக அவர் இந்த கோலை இன்று (சனிக்கிழமை) பதிவு செய்திருந்தார்.
35 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இது தவிர உலக அளவில் பிரசித்தி பெற்ற கிளப் அணிகளுக்காகவும் விளையாடி வருகிறார்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி அணி, Troyes அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டி 54-வது நிமிடம் வரை பிஎஸ்ஜி அணி 1 - 2 என்ற கோல் கணக்கில் பின் தங்கி இருந்தனர். 55-வது நிமிடத்தில் மெஸ்ஸி, சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்று அசாத்தியமான கோலை பதிவு செய்தார். அந்த நேரம் மைதானமே ‘மெஸ்ஸி.. மெஸ்ஸி’ என முழக்கமிட்டு வந்தது.
அடுத்த சில நிமிடங்களில் நெய்மர், கோல் பதிவு செய்ய மெஸ்ஸி உதவினார். அதே போல எம்பாப்வே, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார். அதன் மூலம் அந்த அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது. 12 லீக்1 போட்டிகளில் 7 கோல்கள் மற்றும் 10 அசிஸ்ட்களை செய்துள்ளார் மெஸ்ஸி.