

மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குரூப் 1-இல் இடம்பெற்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மழை காரணமாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் மழை காரணமாக போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சூப்பர் 12 சுற்றில் மட்டும் மொத்தம் 3 போட்டிகள் மழையினால் நடத்த முடியாமல் கைவிடப்பட்டுள்ளது. அதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புடைய அணிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதில் ஒரு போட்டியில் ஆட்டத்தின் முடிவு டக்வொர்த் லூயிஸ் முறையில் எடுக்கப்பட்டது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் மழை காரணமாக போட்டிகள் நடத்தப்படாமல் கைவிடப்பட்டால் புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மழை குறுக்கிட்டால் அந்த போட்டிகளுக்கு ரிசர்வ் டே உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அது குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியை கூட நடத்த முடியாமல் போனால் மட்டும்தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் எப்போதும் மழை பொழிவு இருக்கின்ற நேரத்தில் ஐசிசி தொடர்கள் நடத்தப்படுகிறது என ரசிகர்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மழை காரணமாக ரிசர்வ் டே போட்டியில் விளையாடி ஆட்டத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதுதான் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் கடைசி போட்டியும் கூட.