Published : 26 Oct 2022 10:05 PM
Last Updated : 26 Oct 2022 10:05 PM

“பாகிஸ்தான் தான் நல்ல வேகப் பந்துவீச்சு அணி!” - அனில் கும்ப்ளே மனம் திறப்பு

அனில் கும்ப்ளே மற்றும் பாகிஸ்தான் பவுலர்கள்

நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி என்றால், அது பாகிஸ்தான் தான் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். மேலும், அவர் கூறிய போது, இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர் கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு சிலபல அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ்தான் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பிரமாதமாக வீசி கவனத்தை ஈர்த்து இன்று இந்திய அணியில் ஒரு தவிர்க்க முடியாத பவுலர் ஆகியுள்ளார். அன்று பாகிஸ்தானுக்கு எதிராக பாபர் அசாமை இன்ஸ்விங்கரில் டக் அவுட் செய்து ரிஸ்வானை பௌன்சரில் வீழ்த்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிற்பாடு விராட் கோலியின் அதியற்புத இன்னிங்சினால் இந்திய அணி பரபரப்பாக கடைசி பந்தில் வென்றது.

இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் பற்றி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் அனில் கும்ப்ளே விதந்தோதிக் கூறியது: “அர்ஷ்தீப் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். டி20 வடிவத்தில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து வந்திருக்கிறேன். கடந்த ஐபிஎல் அவரது வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு, பிரஷர் சூழ்நிலையை அவர் எப்படி கையாண்டார் என்பதற்கு அந்த ஐபிஎல் ஒரு சாட்சி.

அர்ஷ்தீப் சிங்

கடினமான சில ஓவர்களை அவர் பொறுப்பேற்றுக் கொண்டு அணிக்காக வீசினார், டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் எத்தனை வீழ்த்தினார் என்று பார்க்கக் கூடாது. எந்தெந்த தருணங்களில் அவர் வீசுகிறார். அதில் எப்படி பரிமளிக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும். அந்தத் தருணங்களில் அவரிடம் இருந்த பொறுமை பிரமாதமான ஒரு குணாம்சம்.

அவரது இந்த குணத்தைத்தான் அன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போதும் பார்த்தோம். 90,000 பார்வையாளர்கள் முன்னிலையில் அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றமில்லாமல் வீசுவது என்பது கனவுதான். ஆனால் அதிலும் தேறி விட்டார் அர்ஷ்தீப் சிங்.

ஆம்! அர்ஷ்தீப் சிங் முதிர்ச்சியடைந்து விட்டார், அவர் இப்படியே முன்னேறி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது ஜாகீர் கான் போல் இவரும் ஒரு பெரிய பவுலராக வர வேண்டும். இந்திய அணிக்காக அவர் ஆச்சரியகரமான விஷயங்களைச் செய்வார் என்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பையில் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட அணி எது என்ற கேள்விக்கு கும்ப்ளே பதிலளிக்கையில், “பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கின்றனர் என்றே கூற வேண்டும். ஆஸ்திரேலியா போல் அவர்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவிடம் பவுலிங் அட்டாக் சேர்க்கை நன்றாக உள்ளது. இந்திய அணியிடம் நல்ல ஸ்பின் அட்டாக் உள்ளது, வேகப்பந்து வீச்சு என்று என்னிடம் கேட்டால் பாகிஸ்தானைத்தான் சொல்வேன்” என்றார் அனில் கும்ப்ளே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x