

மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு பயிற்சிக்குப் பின்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று இந்திய அணி அதிருப்தி தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளது.
வலைப் பயிற்சிக்குப் பிந்தைய உணவாக வீரர்களுக்கு வெறும் சாண்ட்விச் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீரர்கள் ஐசிசியிடம் தங்கள் அதிருப்தியை பதிவு செய்ததாக பிசிசிஐ வட்டாரம் கூறுகின்றது. டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்தான் வீரர்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பை நிர்வகிக்கிறது.மதிய உணவுக்குப் பின்னர் ஐசிசி வீரர்களுக்கு எவ்விதமான சூடான உணவையும் வழங்குவதில்லை. இருநாடுகளுக்கு இடையேயான போட்டியில் எந்த நாடு போட்டியை ஏற்று நடக்கிறதோ அதுதான் வீரர்களுக்கான உணவை வழங்குகிறது. இந்நிலையில் தான், பயிற்சிக்குப் பின்னர் வழங்கப்பட்ட உணவு மோசமாக இருந்தாக இந்திய அணி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து 45 நிமிடங்கள் பயண தூரத்தில் உள்ள ப்ளாக்டவுன் என்ற இடத்தில் இடம் தரப்பட்டிருந்ததால் இந்திய அணி பயிற்சியையும் புறக்கணித்துள்ளது.இந்தியா நாளை (அக்.27) நெதர்லாந்து அணியை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.