ஃபிஃபா கால்பந்து WC | கத்தார் உலகக் கோப்பை தொடரே தனது கடைசி என அறிவித்த லூகா மோட்ரிச்

லூகா மோட்ரிச் | கோப்புப்படம்
லூகா மோட்ரிச் | கோப்புப்படம்
Updated on
1 min read

எதிர்வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரே தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என தெரிவித்துள்ளார் குரோஷிய நாட்டு வீரர் லூகா மோட்ரிச். கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

37 வயதான மோட்ரிச், கால்பந்தாட்ட உலகில் சிறந்த மிட்-ஃபீல்டராக போற்றப்பட்டு வருகிறார். அவரது தேசம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிக்கு முன்னேறியதும் கடந்த முறைதான். அந்தத் தொடரில் அவரது சிறப்பான பங்களிப்புக்காக ‘கோல்டன் பால்’ வென்றிருந்தார். 2018 வாக்கில் Ballon d’Or விருதையும் அவர் வென்றிருந்தார்.

30+ வயதை கடந்தும் தான் சார்ந்துள்ள விளையாட்டில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் அவர். கடந்த 2006, 2014 மற்றும் 2018 என மூன்று ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் குரோஷிய அணிக்காக அவர் விளையாடி உள்ளார். இதுவரை தனது தேசத்திற்காக மொத்தம் 154 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 23 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார். 24 கோல்களுக்கு அசிஸ்டும் செய்துள்ளார்.

“நான் ஓய்வு குறித்து யோசிக்கவே இல்லை. நான் தேசிய லீக் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் எங்கள் அணி டாப் 4-இல் நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அப்போது பார்க்கலாம். நான் சிறந்த முடிவை எடுக்க முயற்சி செய்வேன். அந்த நேரத்தில் எனது பயிற்சியாளர்களுடன் ஆலோசிப்பேன். அது குறித்து இந்த தருணத்தில் நான் எதுவும் நினைக்கவில்லை.

நான் எனது வயதை நன்றாகவே அறிந்தவன். குரோஷிய தேசிய அணியுடன் இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்பதையும் நான் அறிவேன்” என லூகா தெரிவித்துள்ளார். 32 அணிகள் பங்கேற்கும் பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 20 வாக்கில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் குரோஷிய அணி குரூப் ‘F’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் பெல்ஜியம், கனடா மற்றும் மொராக்கோ ஆகிய அணிகளும் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in