

சான் பிரான்சிஸ்கோ: தான் இன்னும் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும், அதோடு களத்திற்கு திரும்ப அதிக வாய்ப்புகள் இருப்பதாவும் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதனை சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்வில் பங்கேற்றபோது அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டென்னிஸ் உலகை தங்கள் ராக்கெட்டுகளால் (பேட்) ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர்.
கடந்த செப்டம்பர் வாக்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றில் தோல்வியை தழுவி இருந்தார். அதுதான் அவரது கடைசி தொடர் என நம்பப்பட்டது. அதன் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரும் கண்ணீருடன் தொடரில் இருந்து வெளியேறினார். அவர் ஓய்வு குறித்த தகவல் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தாலும் அதுதான் தனது கடைசி தொடர் என செரீனா சொல்லவில்லை. இந்தச் சூழலில் அவர் இப்படி தெரிவித்துள்ளார்.
“நான் இன்னும் ஓய்வு பெறவில்லை. நான் களத்திற்கு திரும்பும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனது வீட்டில் டென்னிஸ் கோர்ட் உள்ளது. நான் ஓய்வு குறித்து இதுவரை எந்த எண்ணமும் கொண்டிருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.