Published : 24 Oct 2022 08:11 AM
Last Updated : 24 Oct 2022 08:11 AM
இந்திய அணி பேட்டிங்கின் போது 20-வது ஓவரின் 4-வது பந்தை கள நடுவர் நோ-பால் என அறிவித்ததால் அது சர்ச்சைக்குள்ளானது.
20-வது ஓவரை ஸ்பின் பவுலர் முகமது நவாஸ் வீசினார். இதில் 4-வது பந்தை ஃபுல் டாஸாக அவர் வீசியதால் அந்த பந்தை விராட் கோலி, சிக்ஸருக்கு விளாசினார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை நோ-பால் என கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் நோ-பால் அறிவிப்பு சரியானதே என்று நடுவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து 4-வது பந்துக்கு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. 4-வது பந்தை விராட் கோலி எதிர்கொண்ட போது அது ஸ்டம்பில் பட்டு போல்டானது. ஆனால் ஃப்ரீ ஹிட் என்பதால் அந்த பந்தில் விராட் கோலியும், தினேஷ் கார்த்திக்கும் ஓடியே 3 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் நடுவர்களிடம் வந்து அந்த பந்தை டெட் பால் என அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் அதற்கும் கள நடுவர்கள் செவி சாய்க்கவில்லை.ஐசிசி விதிகளின் படியே முடிவு எடுக்கப்பட்டதாக கள நடுவர்கள் தெரிவித்தனர்.
யாருக்கு வெற்றி-தோல்வி என்ற நிலையில் பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்த போது நடுவர்கள் வழங்கிய நோ-பால் அறிவிப்பு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கள நடுவர்கள் வழங்கிய முடிவு சரியே என்று சிலரும், தவறு என்று சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சில துளிகள்:
டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. விராட் கோலி,ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை ருசித்தது. இதன்மூலம் உலகக் கோப்பையில் மீண்டும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. குறிப்பாக, 2021-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதற்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டுள்ளது.
30 @ ரோஹித் சர்மா: 30 சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தானுடன் 10 ஆட்டங்களில் விளையாடி 114 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. சராசரி 14.25. இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரே 30தான்.
15 @ சூர்யகுமார்: அதிரடியாக விளையாடும் சூர்யகுமார் யாதவும், பாகிஸ்தானுடன் குறைந்த ரன்களை மட்டுமே டி20 போட்டிகளில் எடுத்துள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் 11 ரன்களும், 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் 18, 13 ரன்களும், இந்த ஆட்டத்தில் 15 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளார் சூர்யகுமார்.
3 @ ஹர்திக்: பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் 3 விக்கெட்களை வேட்டையாடியுள்ளார் ஹர்திக் பாண்டியா, ஏற்கெனவே 2016 மிர்பூரிலும், 2022-ல் துபாயிலும் 3 விக்கெட்களை பாகிஸ்தானுக்கு எதிராக வீழ்த்தியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT