தென் ஆப்பிரிக்கா அபாரம்: 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸி. 244-க்கு சுருண்டது

தென் ஆப்பிரிக்கா அபாரம்: 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸி. 244-க்கு சுருண்டது
Updated on
2 min read

பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட 158/0 என்று இருந்த ஆஸ்திரேலியா 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

100 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், டேல் ஸ்டெய்னின் அருமையான அவுட் ஸ்விங்கரில் ஸ்லிப்பில் ஆம்லாவிடம் கேட்ச் ஆகி வெளியேற 158/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சிக்குள்ளானது.

டேல் ஸ்டெய்ன், வார்னர் விக்கெட்டை வீழ்த்திய பிறகு தோள்பட்டை வலி காரணமாக பெவிலியன் திரும்பினார். ஏற்கெனவே திணறி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்று கருதிய நேரத்தில் மேட் பிலாண்டர், இடது கை ஸ்பின்னர் மஹராஜ், ரபாதா ஆகியோர் திடீர் எழுச்சியுற்று ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்களை வறளச்செய்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கேப்டன் டு பிளெசிஸ் தன் பங்கிற்கு களவியூகம் மூலம் கடும் நெருக்கடி கொடுத்தார். தென் ஆப்பிரிக்க வீரர்களின் அதற்கேற்ற சுறுசுறு பீல்டிங்கும் வார்னர் ஆட்டமிழந்த பிறகு ரன்களை கடுமையாக வறளச் செய்தது.

வார்னர் ஆட்டமிழந்த தருணத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியிருந்தது, ரவுண்ட் த விக்கெட், ஓவர் த விக்கெட் என பிலாண்டர், ரபாதா கடினமான கோணங்களை பந்தை ஸ்விங் செய்து கொண்டிருந்தனர். புதிய பேட்ஸ்மெனுக்கு கடினம் என்ற நிலை உருவான போதுதான் உஸ்மான் கவாஜாவுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார் ரபாதா, நல்ல வேகம், கவாஜா பவுல்டு ஆனார். அவர் எடுத்த ரன்கள் 4.

வார்னரை விட்டால் ஸ்மித்தை நம்பியிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு பெர்த்தில் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்பின்னர் மஹராஜ் அதிர்ச்சி அளித்தார்.

மஹராஜ் வீசிய பந்தை மேலேறி அடிக்க முயன்ற ஸ்மித் பிளைட்டில் ஏமாற பந்து கால்காப்பில் தாக்கியது. பெரிய முறையீடு எழுப்பாவிட்டாலும் பவுலரின் முறையீட்டுக்கு அலீம்தார் ஆச்சரியகரமாக செவி சாய்த்து எல்.பி.என்று தீர்ப்பளித்தார். டி.ஆர்.எஸ் இல்லாத காலத்தில் இது அவுட் கொடுக்க முடியாததே. இவ்வளவு மேலேறி வருகிறார் பந்து எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்ற வாதம் எழும், ஆனால் அலீம் தார் மிகவும் தைரியமாக அவுட் கொடுக்க, டி.ஆர்.எஸ்.-ம் அதற்கு இசைந்தது.

ஷான் மார்ஷ் 148 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து பிலாண்டர் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு மிட்செல் மார்ஷ், பிலாந்தரின் ஸ்விங் பந்துக்கு கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். தற்போது ஆஸ்திரேலிய அணியைக் காப்பாற்ற களத்தில் இருப்பவர் ஆடம் வோஜஸ் மட்டுமே. ஆனால் இவர் ரபாதாவின் வேகமான பந்தை அவர் கையிலேயே கேட்ச் கொடுத்து வெளியேற ஆஸ்திரேலியா 202/6 என்று ஆனது.

மிட்செல் ஸ்டார்க், மஹராஜ் பந்தை மிட்விக்கெடில் பிளிக் செய்து கேட்ச் ஆனார். நெவில், சிடில் இணைந்த் 29 ரன்களைச் சேர்த்தனர். 23 ரன்கள் எடுத்த நெவில் மஹராஜ் பந்தை ஆட முற்படும்போது பந்து கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் ஆம்லாவிடம் கேட்ச் ஆனதாக தீர்ப்பளிக்கப்பட்டது, பந்து மட்டையில் படவில்லை. களநடுவர் அவுட் என்றார், ரிவியூவை அனாவசியமாகத் தீர்த்த ஆஸ்திரேலியா என்ன செய்ய முடியும்? ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோரை பிலாண்டர் வீழ்த்த ஆஸ்திரேலியா 86 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சோகமுகம் காட்டியது.

பிலாண்டர் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரபாதா 2 விக்கெட்டுகளையும் மஹராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இடையில் ரபாதா, ஷான் மார்ஷுக்கு லெக் ஸ்டம்ப் லைனில் வீசி திசைமாறினார், ஆனால் ஸ்டெய்ன் காயமடைந்து வெளியேறியவுடன் ஒழுங்காக வீசினார்.

தென் ஆப்பிரிக்கா தன் 2-வது இன்னிங்ஸில் சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in