Published : 23 Oct 2022 08:06 AM
Last Updated : 23 Oct 2022 08:06 AM

T20 WC | 13 வருடங்களுக்குப் பிறகு ஆஸி. மண்ணில் வென்ற நியூஸிலாந்து - சாதனை விவரங்கள்

டிம் சவுதி பந்தில் போல்டான ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர்.

சிட்னி: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் டேவன் கான்வேவின் அதிரடி ஆட்டம் மற்றும் டிம் சவுதியின் அபார பந்துவீச்சில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டேவன் கான்வே 58 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் 16 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசி ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவரில் 56 ரன்களை விளாசியிருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 23, கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் நடையை கட்டினர். ஜேம்ஸ் நீஷாம் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஆடம் ஸம்பா ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் தாரை வார்த்தனர்.

201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டேவிட் வார்னர் 5, ஆரோன் பின்ச் 13, மிட்செல் மார்ஷ் 16, கிளென் மேக்ஸ்வெல் 28, மார்கஸ் ஸ்டாயினிஸ் 7, டிம் டேவிட் 11, மேத்யூ வேட் 2, பாட் கம்மின்ஸ் 21, மிட்செல் ஸ்டார்க் 4, ஆடம் ஸம்பா 0 ரன்களில் நடையை கட்டினர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். லாக்கி பெர்குசன், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 13 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அந்த அணியை நியூஸிலாந்து தோற்கடித்துள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி கண்டிருந்தது.

2-வது விரைவு ஆயிரம்….

சர்வதேச டி 20 போட்டிகளில் டேவன் கான்வே ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இந்த மைல் கல்லை அவர் தனது 29-வது ஆட்டத்தில் கடந்துள்ளார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் விரைவாக ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த வகையில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 24 ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

உள்நாட்டில் மோசம்…

டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

2-வது பெரிய வெற்றி..

ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. டி 20 உலகக் கோப்பையில் முழு நேர உறுப்பினர் அந்தஸ்து கொண்ட அணி பெரிய அளவிலான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இங்கிலாந்துக்கு எளிதான வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதாக வென்றது.
பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாம் கரண் சிறப்பாக பந்துவீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x