

டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை அறிமுகமான 2007-ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற 6 உலகக் கோப்பைகளிலும் இந்திய அணியால் பட்டம் வெல்ல முடியவில்லை.
கடந்த ஆண்டு நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 8-வது டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பட்டம் வெல்ல வேண்டும் என்றால் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது. நாங்கள் உலகக் கோப்பை தொடரை வென்று சிறிது காலம் ஆகிவிட்டது. உலகக் கோப்பையை வெல்வதே எங்களது நோக்கம். எங்களது சிந்தனையும், செயல் முறையும் அதை நோக்கியே உள்ளது. எனினும் பல விஷயங்களைச் சரியாகச் செய்தால்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பதை அறிந்துள்ளோம். எனவே ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம்.
எங்களால் வெகுதூரம் முன்னோக்கி சிந்திக்க முடியாது. இப்போதே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி குறித்து நினைத்துக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் எதிராக நன்றாகத் தயாராகி, சரியான திசையில் நகர்வதை உறுதிப்படுத்திக் கொள்வதும் முக்கியம்.
டி20 உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்குகிறோம். இது பெரிய ஆட்டம். அதே நேரத்தில், நாங்கள் மிகவும் நிதானமாக இருக்க விரும்புகிறோம். தனிநபர்களாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அதுவே நமக்கு முக்கியமாக இருக்கும். தனிநபர்கள் தங்களைத் தாங்களே அமைதியாக வைத்துக் கொண்டு, ஆட்டத்தை வடிவமைக்க முடிந்தால், நாங்கள் எதிர்பார்க்கும் முடிவைப் பெறுவோம் என அவர் தெரிவித்தார்.