

சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஸுக்கு பதிலாக ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜோஷ் இங்லிஸ், கோஃல்ப் விளையாடிய போது வலது கையில் காயம் அடைந்ததால் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள கேமரூன் கிரீன் டாப் ஆர்டர் மற்றும் நடுவரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர். மேலும் மிதவேகப் பந்து வீச்சிலும் அசத்தக்கூடியவர்.
பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மேத்யூ வேட் அணியில் இருப்பதால் ஜோஷ் இங்லிஸுக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைப்பது அரிது என்றே கருதப்பட்டது. இதனாலேயே அவருக்கு மாற்றாக ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
23 வயதான கேமரூன் கிரீன் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் அறிமுகமானார். இதுவரை 7 சர்வதேச டி 20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் 2 அரை சதங்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.