

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் அவரது முழு ஆட்ட ஊதியத்தை அபராதத்தில் இழந்தார். ஆனால் இவர் தொடர்ந்து விளையாட அனுமதி அளித்துள்ளது ஐசிசி.
வாயில் சூயிங்கம் அல்லது மிண்ட் மென்று கொண்டிருக்கும் போது உமிழ்நீரை பந்தின் மீது தடவி பளபளப்பு ஏற்றியதால் அது பந்தின் இயல்பான நிலையை மாற்றிய தவறாகும் என்று ஐசிசி முடிவெடுத்தது. இதனையடுத்து அவருக்கு முழு ஆட்டத்தொகையையும் அபராதமாக விதித்தது ஐசிசி. ஆனால் அவர் விளையாடத் தடையில்லை என்று தெரிவித்துள்ளது.
இன்று அடிலெய்டில் நீண்ட நேரம் நடந்த விசாரணையில் ஆண்டி பைகிராப்ட், டுபிளெசிசை துருவித் துருவி விசாரித்தார். அப்போது தொலைக்காட்சி பதிவு சாட்சியுடன் டுபிளெசிஸ் செயற்கை பொருளை பந்தின் மீது தடவியது தெரியவந்தது, மேலும் கள நடுவர்களும் இதனை உறுதி செய்தனர். கள நடுவர்கள் அப்போதே இதன் மீது நடவடிக்கை எடுத்து பந்தை மாற்றியிருக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியது.
இந்நிலையில் இத்தவறை அவர் முதன் முறையாகச் செய்திருப்பதால் போட்டியிலிருந்து தடை செய்யும் அளவுக்கு இதனை நோக்க முடியாது என்று ஐசிசி கூறியதோடு, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் இதே தவற்றைச் செய்தால் அவருக்கு ஓரிரு போட்டிகள் தடை விதிக்கப்படலாம் என்று எச்சரித்தது ஐசிசி.
ஆனால் முடிவை எதிர்த்து டுபிளெசிஸ் மேல்முறையீடு செய்யப்போவதாக கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து 24ம் தேதி தொடங்கும் அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டுபிளெசிஸ் ஆடுவது உறுதியாகியுள்ளது.