

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி விளையாடப் போகும் நான்கு அணிகள் எது என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். இந்தத் தொடரில் டாப் 4 இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது குறித்து பலமான எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வகையில் பலமாக உள்ளது. சில அணிகளில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேற உள்ள நான்கு அணிகள் எது என்பதை சச்சின் கணித்துள்ளார்.
“இந்திய அணி தான் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். இந்தத் தொடரில் டாப் 4 இடங்களை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பிடிக்கும் என நம்புகிறேன். இதில் நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் டார்க் ஹார்ஸாக இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது உள்ள சூழல் தென்னாப்பிரிக்க அணிக்கு பழக்கப்பட்ட ஒன்று. அதை நாம் கவனிக்க வேண்டும்.
இந்திய அணிக்கு இந்த முறை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சரியான சேர்க்கையில் அணியில் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அது ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒருவிதமான பேலன்ஸை கொண்டு வருகிறது என நான் நினைக்கிறேன்” என சச்சின் தெரிவித்துள்ளார்.