

பிரிஸ்பேன்: பாகிஸ்தான் அணியின் இடக்கை பந்து வீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி வீசிய அசுர வேக யார்க்கர் டெலிவரி ஒன்று ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸின் பாதத்தை பதம் பார்த்தது. அதனால் அவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து களத்தில் வலியால் துடித்த அவரை அந்த அணியின் சப்ஸ்டிடியூட் வீரர் ஒருவர் முதுகில் சுமந்து சென்றார்.
இந்த சம்பவம் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடருக்கான வார்ம்-அப் போட்டியில் நடந்தது. காயமடைந்த குர்பாஸுக்கு எலும்பு முறிவு ஏதும் இல்லை என்றும் ஸ்கேன் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. இதனை ஆப்கானிஸ்தான் அணியின் வாரியமும் உறுதி செய்துள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள சூப்பர் 12 சுற்று போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை.
அந்த பந்தை 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார் அஃப்ரிடி. அது குர்பாஸின் இடது காலின் பாதத்தை பதம் பார்த்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அஃப்ரிடி இதன் மூலம் ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற பாணியில் தனது வருகையை எதிரணி வீரர்களுக்கு தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இடது கை பவுலர்கள் அணியில் இருப்பது மிகவும் முக்கியம். அவர்கள் வீசும் அந்த டெலிவரிகள் ஒவ்வொன்றும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எல்லா சர்வதேச கிரிக்கெட் அணிகளும் தங்கள் அணியில் குறைந்தபட்சம் ஒரு இடக்கை பவுலரை தங்கள் அணியில் வைத்துள்ளன. சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு அஃப்ரிடியின் பந்துவீச்சு பெரிதும் உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் அவர் ஃப்ரெஷ் ஆக இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக பாகிஸ்தான் அணி விளையாடிய அண்மைத் தொடர்களில் அவர் விளையாடவில்லை.
வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளனர்.