

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் சுற்றுப்போட்டியின் பிரிவு ஏ ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் கார்த்திக் மெய்யப்பன். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இலங்கை அணி 117/2 என்று நன்றாக ஆடிக்கொண்டிருந்தனர். தொடக்க வீரர் பதுன் நிசாங்கா நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் அதிரடி வீரர் ராஜபக்ச இருந்தார். அப்போதுதான் கார்த்திக் மெய்யப்பன் என்ற அந்த 22 வயது யுஏஇ லெக் ஸ்பின்னர் புகுந்தார். இவர் 13-வது டி20 போட்டியையே ஆடுகிறார். 3 பந்துகளில் வரிசையாக ராஜபக்ச, சரித் அசலங்கா, இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ஆகியோரை காலி செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
முதலில் ராஜபக்ச ஆஃப் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த பந்து கூக்ளியின் அசலங்கா எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் அரவிந்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசியாக இலங்கை கேப்டன் ஷனகாவின் ஸ்டம்ப் கூக்ளியின் தொந்தரவாக ஹாட்ரிக் சாதனை. அதுவும் உலகக் கோப்பை டி20 ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் கார்த்திக் மெய்யப்பன்.
இந்த ஹாட்ரிக் சாதனை மூலம் பிரெட் லீ (2007), கர்ட்சிஸ் கேம்ஃபர் (2021), வனிந்து ஹசரங்கா (2021), கேகிசோ ரபாடா (2021) ஆகியோருடன் டி20 உலகக்கோப்பை ஹாட்ரிக் பட்டியலில் இணைந்தார் கார்த்திக் மெய்யப்பன்.
யார் இவர்? கார்த்திக் மெய்யப்பனின் இயற்பெயர் கார்த்திக் பழனியப்பன் மெய்யப்பன். இவர் 2000-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னை, அபுதாபி, துபாய் என்று இருந்து கொண்டிருந்த இவரது குடும்பம் 2006-ல் துபாயில் செட்டில் ஆனது. இங்கிருந்துதான் கார்த்திக் மெய்யப்பன் இன்று யுஏஇ அணிக்கான சர்வதேச வீரராகியுள்ளார்.
துபாயில் வின்செஸ்டர் பள்ளியில் படித்தவர், அங்குதான் தற்போதைய சக வீரரான ஆர்யன் லக்ராவும் இவருடன் சேர்ந்து படித்தார்.
ஐபிஎல் 2020 தொடரின் போது ஆர்சிபி அணியில் இணைந்த போதுதான் இவரது பெயர் கிரிக்கெட் உலகில் பிரபலமானது. ஆர்சிபி அணியுடன் இவரும் யுஏஇ கேப்டன் அகமது ரசாவும் பயிற்சி பெற்றனர்.
கார்த்திக் மெய்யப்பன் யுஏஇ யு-19 அணியை வழிநடத்தியவர். 2019-ல் ஷார்ஜாவில் அமெரிக்காவுக்கு எதிராக யுஏஇ அணிக்காக தன் முதல் போட்டியில் அறிமுகமானார் கார்த்திக் மெய்யப்பன் .அயர்லாந்துக்கு எதிராக முதல் டி20 சர்வதேசப் போட்டியில் 2021-ல் அறிமுகமானார். 8 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் நேற்றைய போட்டியோடு 13 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியுள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 10 விக்கெட்டுகளையும் டி20-யில் இதுவரை 18 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.