

லக்னோ: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பெற இந்திய அணிக்கு வெறும் 30 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த தொடரில் தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011 என இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. அதனால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கபில் தேவ் இப்படிச் சொல்லியுள்ளார்.
“ஆல் ரவுண்டர்கள் தான் ஒரு அணிக்கு மிகப்பெரிய பலம். அது உலகக் கோப்பை தொடர் மட்டுமல்ல வேறு எந்த தொடரானாலும் சரி. இந்திய அணிக்கு அப்படி ஒரு ஆல் ரவுண்டர் தான் ஹர்திக் பாண்டியா. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் திறன் படைத்த வீரர். கேப்டன் ரோகித்துக்கு ஆறாவது பவுலர் ஆப்ஷனை கொடுப்பதும் அவர் தான். ஜடேஜாவும் இந்திய அணியின் தரமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர்.
டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரையில் கிரிக்கெட் அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் தோல்வியை தழுவ வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் அதை சொல்வது ரொம்பவே கஷ்டம்.
இப்போது சிக்கல் என்னவென்றால் இந்திய அணி இந்த தொடரில் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருக்குமா என்பதுதான்? என்னை பொறுத்த வரையில் இந்திய அணிக்கான அந்த வாய்ப்பு வெறும் 30 சதவீதம் மட்டும்தான் உள்ளது என நான் கருதுகிறேன். எனக்கு அது சங்கடத்தை கொடுக்கும் வகையில் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். பும்ரா, ஜடேஜா போன்ற பிரதான இந்திய வீரர்கள் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையை மிஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.