Published : 19 Oct 2022 06:40 AM
Last Updated : 19 Oct 2022 06:40 AM
ஜீலாங்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றை நெருங்கி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஜீலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நமீபியா பவர்பிளேவில் 3 விக்கெட்களை இழந்து 32 ரன்கள் சேர்த்தது. திவான் லா காக் 0, மைக்கேல் வான் லிங்கன் 20, ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் 0 ரன்களில் வெளியேறினர். இதன்பின்னர் ஸ்டீபன் பார்டுடன் இணைந்த ஜான் ஃப்ரைலின்க் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். 31 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை ரோலோஃப் வான் டெர் மெர்வி பிரித்தார். அவரது பந்தில் ஸ்டீபன்பார்டு 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ஜான் ஃப்ரைலின்க் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் டி லீடே பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்று ஆட்டமிழந்தார். இதே ஓவரில் கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸும் (16) வெளியேறினார். கடைசி 3 ஓவர்களில் நமீபியா 27 ரன்கள் சேர்த்ததால் ஓரளவு கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. அந்த அணியால் 7 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதுவே நெதர்லாந்து அணியின் பந்து வீச்சுச்கு சான்றாக அமைந்தது. டி லீடே 3 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
122 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங், மேகஸ் ஓ‘டவுட் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. விக்ரம்ஜித் சிங் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. இதனால் அந்த அணி எளிதாக வெற்றி பெறும்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நமீபியா பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து 4 விக்கெட்களை கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேக்ஸ் ஓ'டவுட் 35, டாம் கூப்பர் 6, காலின் அக்கர்மான் 0, ஸ்காட் எட்வர்ட்ஸ் 1 ரன்னில் நடையை கட்டினர். வைஸ் வீசிய கடைசி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்தது. இதில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி லீடே, 3-வது பந்தில் இரு ரன்கள் சேர்க்க நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி லீடே 30 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களும், டிம் பிரிங்கிள் 8 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 4 புள்ளிகள் பெற்றுள்ள நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அருகில் நெருங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT