

புதுடெல்லி: 2023 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆசியப் கோப்பையில் பங்கேற்பதாக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்தத் தகவலை தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறுத்துள்ளார்.
ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது என்றும், மாறாக ஆசியக் கோப்பைத் தொடர் போட்டிகளில் பொதுவான வேறொரு இடத்தில் (நாட்டில்) நடக்கும் என்று நம்பப்படுவதாகவும் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
மெல்போர்னில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் - இந்தியா இடையே எந்த தனிப்பட்ட போட்டிகளும் நடக்காமல் உள்ளன. ஐசிசி சார்பாக நடக்கும் போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை ரசிகர்கள் பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.