Published : 17 Oct 2022 09:02 PM
Last Updated : 17 Oct 2022 09:02 PM

தகர வீடு, தாயாரின் துணை... - குடும்பத்தை கிரிக்கெட்டால் தூக்கி நிறுத்திய மே.இ.தீவுகள் வீரர் போவெலின் கதை!

ரோவ்மன் போவெல் | கோப்புப்படம்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான ரோவ்மன் போவெல் தனது வாழ்க்கையில் கடும் ஏழ்மையிலிருந்து போராடி மேலேறி வந்து கிரிக்கெட்டில் தனக்கான இடத்தையும் போராடிப் பெற்று தன் குடும்பத்தை வறுமையிலிருந்து விடுவித்து தூக்கி நிறுத்திய வீரர் ஆவார். ரோவ்மன் போவெல் 1993-ம் ஆண்டு ஜமைக்காவில் பிறந்தார். தந்தை குடும்பத்தை கவனிக்காமல் விட்டுச் சென்று விட்டார். பொறுப்பு முழுதும் போவெலின் தாயார் தலையில் விழுந்தது. குடும்ப பாரத்துடன் தன் கடின உழைப்பையும் சுமந்தவர் போவெலின் தாயார் ஜோவான் ப்ளுமர்.

ஜமைக்காவின் எதிர்காலத் தடகள வீரர்கள் பட்டியலில் ரோவ்மன் போவெலும் ஒருவர். படிப்பில் கூட பெரிய ஆளாக வந்திருக்க வேண்டியவர்தான். ஆனால் அவருக்கு ஒளி காட்டியது கிரிக்கெட் என்கிறார். இவரது கிரிக்கெட் திறமைகளை, குறிப்பாக பவர் ஹிட்டர் என்ற இவரது திறமையைக் கண்டுப்பிடித்தவர் இவரது உடற்கோப்பு ஆசிரியர் ஆவார். இவர்தான் போவெலை கிரிக்கெட்டுக்குள் கொண்டு வந்தார். இன்று அதன் பயனாக வெஸ்ட் இண்டீஸ் ஒரு சிற்ந்த அதிரடி வீரரைப் பெற்றுள்ளது.

இவரது பால்யப் பிராயம் முதல் இளமைப் பிராயம் வரையிலும் இவரது தாத்தாவும் கொள்ளுத் தாத்தாவும் இரவு வேளைகளில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பொற்காலக் கதைகளை போவெலுக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். மே.இ.தீவுகளின் பொற்கால கிரிக்கெட்டில் வெஸ்லி ஹால் தொடங்கி ரோஹன் கன்ஹாய், எவர்டன் வீக்ஸ், ரோவ், ராய் பிரெடெரிக்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், ஆல்வின் காளிச்சரன், கிளைவ் லாய்ட், டெரிக் முர்ரே, ஜெஃப் டியூஜான், ராபர்ட்ஸ், கார்னர், கிராஃப்ட், ஹோல்டிங், மார்ஷல், வான்பன் ஹோல்டர், பெர்னர்ட் ஜூலியன், கீத் பாய்ஸ் என்று நீண்ட நெடும் பட்டியலை போவெலுக்கு எடுத்துக் கூறி கிரிக்கெட்டில் ஆர்வம் வரவைத்தவர் போவெலின் தாத்தா என்கிறார் அவர்.

அனைத்திற்கும் மேலாக மாடர்ன் மாஸ்டர் ஆன பிரையன் லாராவைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர் ரோவ்மென் போவெல். போவெலின் குழந்தைப் பிராய வாழ்க்கை இளமைப் பிராய வாழ்க்கைக் கடும் வறுமையில் உழன்றது. போவெலின் தாயார் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். தாயார் கடுமையான உழைப்பாளி. கடினமான வேலைகளைச் செய்து போவெலுக்கு பேட், ஷூக்கள் உள்ளிட்ட கிரிக்கெட் சாதனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
தாயார் வேலைக்குச் சென்ற பிறகு தன் இளைய சகோதரியைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் போவெலிற்குச் சேர்ந்தது.

ஜமைக்கா கிங்ஸ்டனில் உள்ள ஓல்ட் ஹார்பரின் பானிஸ்டரில்தான் இவரது வீடு. அதாவது தகரக் கூரை சிறிய வீடு அமைந்திருந்தது. மழை பெய்தால் கடுமையாக ஒழுகும் வீட்டில் மழை பெய்யும் போதெல்லாம் தாயும் தங்கையும் உறங்கும் இடத்துக்கு மழை நீர் சென்று நனைத்து விடாமல் இரவு முழுதும் கண்விழித்துக் காத்திருக்கிறாராம் போவெல். நல்ல வீடு ஒன்றை கட்டுவது இவரது தாயாரின் கனவு. ஆனால் பணம் ஏது? அப்போது போவெல் ‘என் உழைப்பின் மூலம் நான் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவேன்’ என்று கூறி அதை செய்தும் காட்டியுள்ளார்.

“கிரிக்கெட்டுக்கு வந்தவுடன் பணம் சேர்த்ததும் நான் செய்த முதல் வேலை என் தாயார் விருப்பமான வீட்டை கட்டுவதுதான். கட்டிக்கொடுத்தேன்” என்கிறார் பெருமையுடன் போவெல். இதோடு நில்லாமல் தாயாருக்கு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அது யுண்டாய் டஸ்கன், இப்போது மெர்சிடஸ் புதிய காருடன் இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார் போவெல். இவருக்கு இது அனைத்தையும் கொடுத்தது இவரது கிரிக்கெட் திறமைதான்.

இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் நச்சென்று கூறிய ஒரு வாசகம் என்னவெனில், “எங்களில் சிலர் எங்களுக்கான செல்வத்தை ஈட்ட உந்தப்பட்டோம். எனவே நாங்கள் சிறிய விஷயங்களைச் சாதித்ததற்காக கொண்டாடினால் எங்களைப் பொறுத்தருளுங்கள்” என்று போவெல் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

2015-ல் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே கயானாவுக்கு எதிராக 20 ரன்களுக்கு 3 விக்கெட், 31 ரன்களை எடுத்தார் போவெல். முதல் தர கிரிக்கெட்டில் 2015-16-ல் அறிமுகமானார். பாரம்பரியப் புகழ்மிக்க ஜமைக்கா அணிக்காக கயானாவுக்கு எதிராக முதல் முதல்தரப் போட்டியில் ஆடினார் போவெல் அங்கிருந்து திரும்பிப் பார்க்கவில்லை போவெல். திறமையின் படிக்கட்டுகளில் மேலேறி வந்து இன்று மே.இ.தீவுகளின் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வளர்ந்து வந்ததோடு தனியார் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு முத்திரைப் பதித்து அதன் வருவாயில் தன் குடும்பத்தையும் வறுமையிலிருந்து மீட்டுத் தூக்கி நிறுத்தியுள்ளார் போவெல்.

ஆகவே, தனியார் கிரிக்கெட் ஒருபுறம் கிரிக்கெட்டின் நுட்பங்களை அழித்து விடுகிறது, கிரிக்கெட்டையே காலி செய்து விடுகிறது, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து வருகிறது என்றெல்லாம் கிரிக்கெட்டின் மேட்டுக்குடிகள் பேசி வந்தாலும் சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்கள் பலருக்கு பொருளாதார ரீதியாக வாழ்வின் வெளிச்சத்தைக் காட்டியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. தமிழக வீரர் டி.நடராஜனும் ஒரு எளிய பின்னணியிலிருந்து வந்து ஐபிஎல் கிரிக்கெட் மூலம் வாழ்க்கையில் பொருளாதார ஏற்றங்களைக் கண்டவர்.

இன்னும் எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள், இப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒரு டி20 லீகில் ஏழ்மைப் பின்னணி கொண்ட கிரிக்கெட் திறமை கொண்ட எத்தனையோ தென் ஆப்பிரிக்க வீரர்களும் பயனடைவார்கள் என்றே அங்கு சர்வதேச தொடர் கூட புறக்கணிக்கப்பட்டு இந்த தனியார் டி20 லீகிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்! ஆஸ்திரேலியா சென்று 3 ஒருநாள் போட்டிகள் விளையாட வேண்டிய தென் ஆப்பிரிக்கா அந்தத் தொடரை ரத்து செய்ததற்குக் காரணம் இந்தத் தனியார் லீக்தான். இதனால் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தகுதி சுற்றில் ஆடித்தான் தென் ஆப்பிரிக்கா தகுதி பெற முடியும் என்ற நிலை வந்தாலும் பரவாயில்லை வாரியத்தில் பணம் இருந்தால்தான் புதிய திறமைகளை அடையாளம் கண்டு கொண்டு வர முடியும் என்ற முடிவில் தென் ஆப்பிரிக்கா வாரியம் உறுதியாக உள்ளது.

ரோவ்மென் போவெல் போல் வறுமையில் இருந்து மீள கிரிக்கெட் திறமை கொண்ட இன்னும் எத்தனையோ வீரர்கள் உள்ளனர், திறமையுடன் காத்திருக்கின்றனர், தனியார் கிரிக்கெட் இதற்கு உதவினால் அதனால் என்ன கெட்டு விடப்போகிறது?


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x