

பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போலவே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்தி இருந்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வார்ம்-அப் போட்டியில் இந்த ஷாட்டை அவர் ஆடி இருந்தார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் வார்ம்-அப் போட்டியில் விளையாடி இருந்தன. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஷமி போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதில் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் என இருவரும் அரைசதம் விளாசி இருந்தனர். பேட் கம்மின்ஸ் வீசிய 5-வது ஓவரின் மூன்றாவது பந்தில் இந்த சிக்சரை அவர் விளாசி இருந்தார் ராகுல். அது கிட்டத்தட்ட தோனி ஆடும் ஹெலிகாப்டர் ஷாட் போலவே இருந்தது. அந்த பந்தை நல்ல லெந்தில் ஸ்டம்புகளை நோக்கி வீசி இருந்தார் கம்மின்ஸ். அதை பிக் செய்த ராகுல், மிட்-விக்கெட் திசையில் சிக்சருக்கு பறக்க விட்டிருந்தார்.
இந்தப் போட்டியில் 27 பந்துகளில் அரைசதம் பதிவு செய்திருந்தார் அவர். மொத்தம் 57 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை அவர் இழந்தார். தென்னாப்பிரிக்க தொடர், பயிற்சி ஆட்டம் மற்றும் வார்ம்-அப் என அனைத்திலும் தனது ஃபார்மை கேரி செய்து வருகிறார் அவர்.