

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான வார்ம்-அப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியில் அனுபவ பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பங்களிப்பு முக்கியமானது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால் அதை தவிடு பொடியாக்கினார் ஷமி. அவர் நெட்டிசன்கள் போற்றி வருகின்றனர்.
ஆனால், காலசக்கரத்தை பின்னோக்கி கடந்த 2021 அக்டோபர் 24 சுழற்றினால் 2021 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 ‘குரூப் - 2’ சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி பவுலரான இதே ஷமி, 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அந்தப் போட்டியில் அவர் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. அதன் காரணமாக அவர் நம்பிக்கை வைத்துள்ள மதத்தின் அடிப்படையில் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். அதற்கு அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி, ஷமியின் பக்கம் நின்றார். ‘இப்படி பேசுபவர்கள் கிரிக்கெட் ரசிகர்களாக இருக்க முடியாது’ என பின்னர் ஷமி சொல்லியிருந்தார்.
அந்தத் தொடருக்கு பிறகு கிட்டத்தை ஓராண்டு காலம் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக தான் சேர்க்கப்பட்டிருந்தார். இறுதியில் காயம்பட்ட பும்ராவுக்கு மாற்றாக அணியில் இடம்பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வார்ம்-அப் போட்டியில் அவர் வீசியது ஒரே ஓவர் தான்.
ஆனாலும் அந்த 6 பந்துகளும் ஆயிரம் தங்க காசுகளுக்கு சமம். முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் விக்கெட் மழை பொழிந்தார். கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒரு ரன் அவுட்டும் எடுத்திருந்தார். இந்திய அணி ஆசிய கோப்பை தொடர் முதலே இறுதி ஓவர்களில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறது. அதற்கு தனது வருகை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஷமி.
போற்றும் நெட்டிசன்கள்... - இவர் இந்திய அணியின் வியக்கத்தக்க வீரர், ஷமியின் 3.0 வெர்ஷன் இது, ஷமியை டி20 கிரிக்கெட் அணியில் இருக்க வேண்டுமென ஏன் யாரும் எண்ணிக்கூட பார்க்கவில்லை என தெரியவில்லை, வந்தார் வென்றார், கிரிக்கெட் களத்தில் அண்டர்டேக்கர் நுழைந்ததை போன்ற உணர்வு என நெட்டிசன்கள் அவரது ஆட்டத்தை போற்றி உள்ளனர்.