

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் வார்ம்-அப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி இருந்தன. இந்தப் போட்டியை இந்திய அணி வீரர்கள் நேரில் பார்த்திருந்தனர். அந்தப் படம் தற்போது வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் தொடங்கி உள்ளன. சூப்பர் 12 சுற்றில் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ள அணிகள் வார்ம்-அப் போட்டியில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராகவும் விளையாடி இருந்தன. இதில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து வசம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
இந்த இரண்டு போட்டிகளும் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரின் காபா கிரிக்கெட் மைதானத்தில் விளையாடப்பட்டது. இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் விளையாடியது. அந்தப் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் மைதானத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டியை பார்த்தனர்.
அர்ஷ்தீப், ஹர்ஷல், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், அஸ்வின் போன்ற வீரர்கள் இந்தப் போட்டியை பார்த்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வரும் 23-ம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளது. இரு அணிகளுக்கும் தொடரில் இதுவே முதல் போட்டியாக அமைந்துள்ளது.