Published : 17 Oct 2022 12:52 PM
Last Updated : 17 Oct 2022 12:52 PM

T20 WC அலசல் | நாங்கள் ‘நெட் பவுலர்கள்’ அல்ல - இலங்கைக்குப் பாடம் புகட்டிய நமீபியா

2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி கண்டது. இந்தத் தோல்விக்குக் காரணம் நமீபியா போன்ற அணிகளை இலங்கை குறைத்து மதிப்பிடுவதும், இந்தப் போட்டி நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் கீலாங் மைதானத்தின் ஆடுகளமும் அதன் பரிமாணமுமே என்றால் மிகையாகாது.

நமீபியா போன்ற அணிகள் ஐசிசி நடத்தும் பிற சிறிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் எப்படி ஆடிவந்திருக்கிறது, அதன் முக்கிய வீரர்கள் யார் யார்? முக்கிய பவுலர்க்ள் யார்? அந்த அணி சேசிங்கில் பலவீனமான அணியா அல்லது இலக்கை எடுத்து எதிரணியை கட்டுப்படுத்தும் அணியா என்பதையெல்லாம் இலங்கை ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. ஆசிய சாம்பியன் போல் இலங்கை அணி ஆடவில்லை. ஆசிய சாம்பியன் ஆனது ஏதோ குருட்டு அதிர்ஷ்டம் என்றே இப்போது தெரிகிறது.

முதல் தவறு டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா ஏன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்? முதலில் பேட் செய்திருந்தால் ஒரு ஸ்கோரை, அதாவது 150-160 ரன்களே போதும் நமீபியாவை தங்கள் ஸ்பின்னை வைத்து நெருக்கியிருக்கலாம். பீல்டிங்கைத் தேர்வு செய்ததை நியாயப்படுத்துமாறு நமீபியா விக்கெட்டுகளும் சரிவடைந்து 16/2 பிறகு 4.5 ஓவர்களில் 35/3, 11.5 ஓவர்களில் 76/4. கடைசியில் 14.2 ஓவர்களில் 93/6 என்று கடும் சரிவு கண்டது நமீபியா.

ஆனால், அதன் பிறகு இலங்கை அணி கோட்டை விட்டதன் காரணம் அலட்சியம்தான், இதனை பயன்படுத்திக் கொண்ட ஜேன் பிரைலிங்க் (44), ஜே.ஜே.ஸ்மிட் (31) இருவரும் ஆட்டமிழக்காமல் மேலும் 70 ரன்களைச் சேர்த்து 163 ரன்களுக்கு கொண்டு சென்றனர், கடைசி 4 ஓவர்களில் 57 ரன்களை விட்டுக் கொடுத்தது இலங்கை பந்து வீச்சு.

164 ரன்கள் இலக்கை விரட்டும்போது இலங்கையின் பிரதான கவலை என்னவெனில், ஆட்டத்தின் ஒரு இடத்தில் கூட இலங்கை அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற நிலை கூட தெரியவில்லை என்பதே. பென் ஷிகாங்கோ என்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் முதல் பந்தை யார்க்கராக வீசும்போதே அவர் விவரமானவர் என்பதை தெரிந்திருக்க வேண்டும் இலங்கை தொடக்க வீரர் நிஷாங்கா. ஆனால், இரண்டாவது பந்தை வாரிக்கொண்டு கிராஸ் பேட் ஷாட் ஆட, பந்து நேராக 30 அடி சர்க்கிளுக்குள் மிட் ஆனில் கேட்ச் ஆனது. அடுத்த பந்தே தனுஷ்கா குணதிலகா அருமையான அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்து டக் அவுட் ஆகி வெளியேறினார். ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்ற ஷிகாங்கோ அடுத்த பந்தை ராஜபக்சாவுக்கு அருமையாக உள்ளே கொண்டு வர கால் காப்பில் வாங்கி ரிவியூவுக்குச் சென்றது. நாட் அவுட் என்று வந்தது, அதிர்ஷ்டமில்லாத பென் ஷிகாங்கோ ஹாட்ரிக் எடுக்க முடியவில்லை.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த ஷிகாங்கோவை அடுத்த ஓவர் கொடுக்காமல் நமீபியா கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸ் கட் செய்தது படு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், இதையும் இலங்கை அணிப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், ஜெரார்டு எராஸ்மஸ் இலங்கையை பற்றி நன்றாக திட்டமிட்டுள்ளார். ராஜபக்சே இருக்கும் வரை முதலில் ஸ்பின்னை கொண்டு வராமல் வேகப்பந்து வீச்சையே வைத்திருந்து அவரை முடக்கினார். மேலும், இலங்கை அணி சிறிய மைதானங்களிலேயே விளையாடி பழகியதால் கீலாங் மைதானத்தின் பரிமாணம் புரியவில்லை.

தூக்கி அடித்தால் பந்து உருண்டு பவுண்டரிக்குச் செல்லாமல் அங்கேயே நிற்கும் அளவுக்கு புறக்களத்தில் புற்களின் அடர்த்தி அதிகமாக இருந்தது. அப்போது ஒன்று இரண்டு என்று எடுத்து தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பும் அணுகுமுறையை கையாண்டிருக்க வேண்டும் இலங்கை. ஆனால், ஏதோ நமீபியா பவுலர்களை நெட் பவுலர்கள் போல் குறைவாக் எடை போட்டு தூக்கி அடிக்கப்போய் கேட்ச் ஆகி வரிசைக்கட்டி வெளியேறினர் இலங்கை அணியினர். 19-வது ஓவரில் 108 ரன்களுக்குச் சுருண்டனர்.

ஏற்கெனவே கடந்த உலகக் கோப்பையில் ஐசிசி முழு உறுப்பினர் அணியான அயர்லாந்தை வீழ்த்தி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்ற அணி நமீபியா. இந்த முறை ஆசிய சாம்பியன்களுக்குக் கடும் அதிர்ச்சியளித்துள்ளது.

நமீபியாவின் திருப்பு முனை பார்ட்னர்ஷிப்: 93/6 என்ற நிலையில் நமீபியா தன்னம்பிக்கையுடன் ஆடியதுதான் திருப்பு முனை. 34 பந்துகளே மீதமுள்ள நிலையில் எப்படியும் 130 ரன்கள்தான் எடுத்திருக்க வேண்டும். 16-வது ஓவரில் ஃப்ரைலின்க், சமீராவை ஓங்கி ஒரு ஷாட் அடித்து அதிரடியைத் தொடங்கி வைத்தார். வைனிந்து ஹசரங்காவை ஸ்மிட் தூக்கி அடித்தார். மீண்டும் ஸ்மிட் ஒரு சிக்ஸ் அடிக்க ஃபரைலிங் 28 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். ஸ்மிட் 16 பந்துகளில் 31 ரன்கள், கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் விளாசப்பட்டது. இருவரும் சேர்ந்து 34 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்தனர். இதுதான் நமீபியாவின் வெற்றியில் திருப்பு முனை.

இலக்கை விரட்டும்போது நமீபியாவின் வேகப் பந்துவீச்சாளர்கள் அருமையாக வீசினர், டைட்டாக வீசினர், ஒரே ஓவரில் ஷிகாங்கோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஸ்பின்னர் பெர்னாட் ஷூல்ட்ஸ் 4 ஓவர் 18 ரன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆல்ரவுண்டர் ஃப்ரைலிங்க் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தத் தோல்விக்கு இலங்கையின் திட்டமின்மையே காரணம். மேலும் நமீபியா பவுலர்களை ஏதோ நெட் பவுலர்கள் போல் நினைத்து ஆஸ்திரேலிய மைதானத்தின் பரிமாணத்தை மறந்து தூக்கி அடித்து ஆட்டமிழந்ததும் இலங்கை அணியின் வீழ்ச்சிக்குக் காரணம்.

இதனால் என்ன ஆகிவிட்டது எனில், இலங்கையின் நெட் ரன் ரேட் மைனஸ் 2.75 ஆக மிகக் குறைவாக உள்ளது. மீதமிருக்கும் 2 போட்டிகளில் 0 புள்ளியில் உள்ள யுஏஇ-யைக் கூட வீழ்த்தி விடலாம், அப்படி வீழ்த்தினாலும் பெரிய மார்ஜினில் வீழ்த்த வேண்டும், நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை போராட வேண்டும். வெற்றி பெறுவதென்றால் பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் பிரதான சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x