

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை ஆச்சரியப்படுத்திய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பெர்த் மைதானத்தில் நேற்று காலை வலைப்பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதன் அருகிலுள்ள மற்றொரு பயிற்சி மைதானத்தில் ஏராளமான சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருப்பதை பார்த்த ரோஹித் ஆச்சரியம் அடைந்தார்.
இதையடுத்து அங்கு சென்ற ரோஹித், அந்த சிறுவனை பந்துவீசுமாறு கூறினார். சிறுவனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் அவரது திறமையை ரோஹித் பாராட்டினார். அப்போது அந்த 11வயது சிறுவன் துருஷில் சவுகான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் சென்று சக வீரர்களுக்கு ரோஹித் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது சிறுவன் துருஷில் கூறும்போது, “நான் கிரிக்கெட் வீரராக விரும்புகிறேன். இன்ஸ்விங் யார்க்கர் வகை பந்துகளை வீசுவதை நான் விரும்புவேன்" என்றார்.
துருஷில் சவுகானுக்கு, ரோஹித் சர்மா ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த புகைப்படம் பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரோஹித்தை ஆச்சரியப்படுத்திய சிறுவன் துருஷிலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.