சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவில் உள்ள புஸ்ஹொவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் நடந்தது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, சீன வீராங்கனையான சன் யுவை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியின் முதல் செட்டை 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற சிந்து, 2-வது செட்டை 17-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இரு வீராங்கனைகளும் தலா ஒரு செட்டை வென்றதால், 3-வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இந்த செட்டில் துடிப்பாக விளையாடிய சிந்து 21-11 என்ற செட்கணக்கில் அதைக் கைப்பற்றினார். இதன்மூலம் 21 11, 17 21, 21 11 என்ற செட்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது அவர் வெல்லும் முதலாவது சூப்பர் சீரிஸ் சாம்பியன் பட்டமாகும். பி.வி.சிந்துவுக்கு முன்னதாக 2014-ம் ஆண்டு இந்திய வீராங்கனை சாய்னா நெவால், சீன ஓபன் பாட்மிண்டன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித் துள்ள சிந்து, ‘ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு என்னிடம் பெரிதாக எதிர்பார்த்த என் ரசிகர்களை இதன்மூலம் திருப்திபடுத்தியுள்ளேன்’ என்றார்.
பிரதமர் வாழ்த்து
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
