

கடந்த 2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. முதல் இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். நெட் கிரெடிட் நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாக உள்ளனர். இவர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களாக உள்ளார் போர்ச்சுகல் அணியின் வீரர் ரொனால்டோ.
மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி உள்ளார். அதிக ஃபாலோயர்களை பெற்ற டாப் 20 பயனர்களில் ஒருவராக விராட் கோலியும் உள்ளார். இந்த பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தாங்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவது உண்டு. அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும்.
அந்த வகையில் இந்த ஸ்பான்சர்ஷிப் பதிவுகள் மூலம் கடந்த 2021-இல் மட்டும் ரொனால்டோ சுமார் 85.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளார். மெஸ்ஸி, 71.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள கோலி, 36.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளார். இந்த தளத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 பிரபலங்களில் மூன்று பேர் மட்டுமே விளையாட்டு வீரர்கள்.