Published : 16 Oct 2022 07:29 AM
Last Updated : 16 Oct 2022 07:29 AM
ஜீலாங்: ஐசிசி-யின் ஆடவருக்கான 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று முதல் சுற்று போட்டியுடன் தொடங்குகிறது. ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க்கில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தன. அப்போது நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் நமீபியா தனது மீதமுள்ள போட்டிகளில் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.
அந்த சுற்றில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தியிருந்தது. அன்றிலிருந்து நமீபியா அணி தன்னம்பிக்கையிலும் அனுபவத்திலும் வளர்ந்துள்ளது. மேலும் சமீபத்திய பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது. இதனால் நமீபியா இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
மறுபுறம் இலங்கை அணியானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளை பந்தாடி ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் உலகக் கோப்பை தொடரைஅணுகுகிறது. ஆசிய கோப்பையில் இலங்கை அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வென்றுகோப்பையை கைப்பற்றியிருந்தது. அதற்கு முன்னர் இலங்கை அணி தான் பங்கேற்ற 10 டி 20 ஆட்டங்களில் 9-ல் தோல்வி கண்டிருந்தது.
ஆசிய கோப்பை பார்மை ஆஸ்திரேலியாவில் இலங்கை அணி தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். இதற்கு அச்சாரமாக ஜிம்பாப்வேக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தசன்ஷனகா தலைமையிலான இலங்கை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா ஆகியோர் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த செயல் திறனை நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் வெளிப்படுத்தக்கூடும்.
முக்கிய வீரர்கள்
வனிந்து ஹசரங்கா:
சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா கடந்த சில ஆண்டுகளில் இலங்கை அணியில் மிக முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். ஹசரங்கா இதுவரை 44 டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பேட்டிங்கில் மிகவும் திறமையானவர் என்பதை ஹசரங்கா சில ஆட்டங்களில் நிரூபித்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 71 ஆகும்.
ஜிம்பாப்வேக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் 25 வயதான ஹசரங்கா,14 பந்துகளில் 37 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேவேளையில் பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.
டேவிட் வைஸ்: கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான நமீபியாவின் டேவிட் வைஸ் மட்டை வீச்சு மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்தத் தொடரில் அவர் 45.40 சராசரியுடன் 227 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் 6 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். இம்முறையும் டேவிட் வைஸ் முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடும்.
2-வது ஆட்டம்
பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரக அணி 2-வது முறையாக டி 20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்கிறது. ஐக்கிய அரபு அமீரகமும், நெதர்லாந்தும் சர்வதேச டி 20 அரங்கில் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. எனினும் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும், பேட்டிங்கில் முஹம்மது வாசிம் 69 ரன் விளாசியும் கவனத்தை ஈர்த்தனர்.
ஸ்காட்லாந்திடம் தோல்வி
நெதர்லாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்தது. ஸ்காட்லாந்தை 7 விக்கெட்கள் இழப்புக்கு151 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் உதவினர். ஆனால் ஸ்காட்லாந்தின் பந்துவீச்சைத் தொந்தரவு செய்ய மேக்ஸ் ஓ'டவுட்டைத் தவிர வேறு யாரும் இல்லாததால் பேட்டிங் குழு மோசமாக செயல்பட்டு தோல்வியடைந்தது.
கடந்த பதிப்பில் நெதர்லாந்து அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், குழு நிலையிலேயே தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் இம்முறை அந்த அணி சிறப்பாக செயல்பட முயற்சி செய்யக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT