Published : 15 Oct 2022 07:55 PM
Last Updated : 15 Oct 2022 07:55 PM

“24 பந்துகளையுமே ‘ஸ்லோயர்’ பந்துகளாக வீசுவதில் தவறில்லை” - ஹர்ஷல் படேல் துல்லிய விளக்கம்

இந்திய டி20 அணியின் மித வேகப்பந்து வீச்சாளர், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்படும் ஹர்ஷல் படேல் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மிகுந்த நம்பிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தன்னால் தன் கோட்டாவான 4 ஓவர்கள், அதாவது 24 பந்துகளையுமே ஸ்லோயர் பந்துகளாக, அதாவது வேகம் குறைந்த பந்துகளாக வீச முடியும், அதில் தவறில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால், ‘ஸ்லோயர் ஒன்’ என்று அழைக்கப்படும் வேகம் குறைக்கப்பட்ட பந்து வெறுமனே வேகமாக ஓடி வந்து மெதுவாக வீசுவது என்பது மட்டுமல்ல, அதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. பேட்டரை பந்து வேகமாக வரும் என்று எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவதுதான் இது. ஆனால், இந்தப் பந்துகளை பார்த்துவிட்டால் சேவாக் போன்ற வீரர்கள் சிக்சருக்கு அனுப்பி விடுவார்கள். இதில் ரிஸ்க் உள்ளது. ஆனால், இதில் நன்கு தேர்ச்சி பெற்று வீசினால் உண்மையில் பேட்டர்களுக்கு ஆடுவதற்கே வெறுப்பாக இருக்கும்.

வெறுமனே கையை மெதுவாகச் சுற்றி ஸ்லோ பந்துகளை வீசினால் மைதானத்துக்கு வெளியே அடிக்கப்படும் வேகப்பந்தை வீசுவது போலவே முழுக்கையையும் வேகமாகவே சுழற்ற வேண்டும். கடைசி நேரத்தில் கட்டை விரலை மட்டும் எடுத்து விடலாம் அல்லது பாம்பு விரலை மட்டும் பந்திலிருந்து எடுத்து விடலாம் அல்லது கடைசி நேரத்தில் ரிஸ்ட்டை திருப்பி பந்தின் வேகத்தைக் குறைக்கலாம் என ஏகப்பட்ட வித்தைகள் உள்ளன. உள்ளங்கையில் பந்தை வைத்து வீசினாலும் ஸ்லோ பந்தாக மாறும். இப்போது உலகில் ஸ்லோ பந்துகளை பல விதங்களில் பல கோணங்களில் வீசி பேட்டர்களை திக்குமுக்காட வைத்து வரும் உலகின் சிறந்த ஸ்லோயர் ஒன் பவுலர் ஹர்ஷல் படேல் என்று கிரிக்கெட் வல்லுநர்களே கூறுகின்றனர்.

‘கிரிக்கெட் மந்த்லி’ என்ற இதழுக்கு ஹர்ஷல் படேல் அளித்த பேட்டியில் தன் ஸ்லோயர் ஒன்கள் பற்றி அளித்த விளக்கம் இதுதான்: “காற்றில் பந்து வரும்போதுதான் ஏமாற்று வேலை தொடங்குகிறது. பிட்ச்சிலும் உள்ளது பிட்ச்சில் பந்துகள் கொஞ்சம் நின்று வந்தால் ஸ்லோயர் ஒன் திறம்பட அமையும். சில சமயங்களில் பிட்ச் ஃபிளாட்டாக மட்டைக்குச் சாதகமாக அமையும். அப்போது காற்றில்தான் ஏமாற்ற முடியும். கையை வேகமாக சுழற்ற வேண்டும். அதாவது வேகப்பந்து வீச்சை விடவும் வேகமாகச் சுழற்ற வேண்டும், ஆனால் பந்து கையிலிருந்து மெதுவாக ரிலீஸ் ஆக வேண்டும்.

அதாவது, விரல்களில் நடுப்பகுதியில் இருக்கும் மூட்டை மடக்கி பந்தை விரல் நுனியினருகில் பிடித்திருக்க வேண்டும். கையை நன்றாக முழு ஸ்பீடில் சுழற்றி பந்தை வீசினாலும் பந்துக்கு அந்த வேகம், அந்த ஆற்றல் செல்லக் கூடாது. கை மட்டும் வேகமாகச் சுழற்றி பந்தை இப்படி கிரிப் செய்து வீசினால் கை வேகமாக சுழலும் பந்து மெதுவாக ரிலீஸ் ஆகும். பந்தை எவ்வளவு தளர்வாகப் பிடிக்க வேண்டுமோ அப்படிப் பிடித்து எவ்வளவு வேகமாக தோள்பட்டையை சுழற்ற வேண்டுமோ சுழற்ற வேண்டும். பந்தின் மீது விரல்களை ஓடவிட வேண்டும். என்னுடைய பந்தின் தையல் கையில் குறுக்குவாட்டாக இருக்கும். டாப் ஸ்பின் போல் வீசுவேன்.

ஆனால், பெரிய ரிஸ்க் என்னவெனில், தாழ்வான ஃபுல்டாஸாகவோ, இடுப்புயர ஃபுல்டாஸாகவோ ஆகிவிடும். பந்தை தூக்கி வீசுமாறு ஸ்லோயர் ஒன்னை வீசினால் பேட்ஸ்மென்களிடத்தில் பந்து தொய்ந்து விழும். இல்லையெனில் ஃபிளாட் ஆக விழும். என்னைப் பொறுத்தவரை ஸ்லோயர் ஒன் பந்துகள் முயற்சி செய்து வீசுவதாகும்... அது, ஏதோ ஸ்டாக் பந்து அல்ல. அதாவது, திடீரென வீசி ஏமாற்றுவது கிடையாது; தொடர்ச்சியாக பேட்டரை ஏமாற்றுவதாகும். அதனால்தான் டி20-யில் 4 ஓவர்கள் ஒரு பவுலருக்கு என்றால் 24 பந்துகளையுமே ஸ்லோ பந்துகளாக வீசலாம். அதில் தவறொன்றுமில்லை. 24 பந்துகளையும் ஸ்லோவாக வீசி 30 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை நான் கைப்பற்றினால், அது நல்ல பவுலிங்தான் என்று நினைக்கிறேன். மாறாக மணிக்கு 150 கிமீ வேகம் வீசி 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்தால் கேப்டன் எனக்கு முன்னுரிமை கொடுப்பாரா, இல்லை அவருக்கா?

பனிப்பொழிவு இருந்தால் ஸ்லோ பந்துகளையே ஸ்லோ ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீசுவேன். சில வேளைகளில் ஸ்லோயர் ஒன் வீச பிட்ச்சும் கண்டிஷன்களும் ஒத்துழைக்காமலே கூட போகும். அப்படியும் ஆகும். அதேபோல் பேட்டருக்குத் தகுந்தாற்போல் ஸ்லோயர் ஒன்களை வீச வேண்டும், விராட் கோலி, ஓங்கி அடிப்பவர் அல்ல, பவர் ஹிட்டர் அல்ல அவர். எனவே, அவர் என் ஸ்லோ பந்துகளை மேலேறி வந்து ஃபுல்டாஸாக மாற்றி மிட்விக்கெட்டில் தட்டி விடுவார். ஸ்லோ பந்துகள் பொதுவாக பவர் ஹிட்டருக்கு எதிராக பயன்படும். கிரீஸுக்குள் சென்று தூக்கி சிக்சர் பவுண்டரி அடிப்பவருக்கு எதிராக ஸ்லோயர் ஒன் பயன்படும்” என்று விவரித்திருக்கிறார் ஹர்ஷல் படேல்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x