Published : 15 Oct 2022 10:51 AM
Last Updated : 15 Oct 2022 10:51 AM

T20 WC | 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையா?

8-வது முறையாக ரோஹித் சர்மா…

இதுவரை நடைபெற்றுள்ள 7 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 653 வீரர்கள் விளையாடி உள்ளனர். இதில் ரோஹித் சர்மா, ஷகிப் அல் ஹசன், டுவைன் பிராவோ, கிறிஸ் கெயில், மஹ்மதுல்லா, முஸ்பிகுர் ரஹிம் ஆகியோர் மட்டுமே 7 உலகக் கோப்பையிலும் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவின் ரோஹித் சர்மா, வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டுமே தற்போது 8-வது முறையாக களமிறங்க உள்ளனர்.

தக்க வைக்குமா ஆஸி.?

டி 20 சாம்பியன் பட்டத்தை எந்த ஒரு அணியும் இதுவரை தக்கவைத்தது கிடையாது. மே.இ. தீவுகள் 2 முறை பட்டம் வென்றுள்ளது. ஆனால் இது தொடர்ச்சியாக நிகழ்ந்தது இல்லை. அந்த அணி 2012, 2016-ல் மகுடம் சூடியது. இடைப்பட்ட 2014-ல் இலங்கை அணி கோப்பையை வென்றிருந்தது. இம்முறை சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் கோப்பையை தக்க வைக்க பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பும்ராவுக்கு பதில் ஷமி

டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்ஜஸ்பிரீத் பும்ரா விலகியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த மொகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.

3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையா?

இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளரான பரத் அருண் கூறியதாவது: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்கும். அங்குள்ள மைதானங்கள் மிகவும் பெரிதாக இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதனால் அவர்களது இருப்பு அணிக்கு தேவை. ஆனால், மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் அதிகம். 11 பேர் கொண்ட அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து தான் விளையாட முடியும்.

2 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது ஒரு விருப்பமாக இருக்கும். ஆனால் 3 பேர் என்பது அதிகம். அதில் யாரேனும் ஒருவருடைய இடத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இருந்திருக்க வேண்டும். அது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்திருக்கும். அவரை போன்ற வீரரை தேர்வு செய்திருந்தால் அது சிறப்பான நகர்வாக அமைந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

7 நகரங்களில்...

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜீலாங், ஹோபர்ட், சிட்னி, அடிலெய்டு, பெர்த், பிரிஸ்பன், மெல்பர்ன் ஆகிய 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் ஜீலாங், ஹோபர்ட் நகரில் முதல் சுற்று ஆட்டங்கள் முழுவதும் நடத்தப்படுகின்றன. மெல்பர்னில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x