

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இது கொஞ்சம் அதிகம் என கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண்.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பரத் அருண்.
“ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்கும். அங்குள்ள மைதானம் மிகவும் பெரிதாக இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதனால் அவர்களது இருப்பு அணிக்கு தேவை. ஆனால், மூன்று ஸ்பின்னர்கள் என்பது கொஞ்சம் ஓவர். ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து தான் விளையாட முடியும். இரண்டு ஸ்பின்னர்கள் என்பது ஒரு சாய்ஸாக இருக்கும். ஆனால் 3 பேர் என்பது அதிகம்.
அதில் யாரேனும் ஒருவருடைய இடத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இருந்திருக்க வேண்டும். அது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்திருக்கும். அவரை போன்ற வீரரை தேர்வு செய்திருந்தால் அது சிறப்பான நகர்வாக அமைந்திருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகி உள்ளார். இந்தச் சூழலில் அவருக்கு மாற்றாக ஷமி விளையாட வாய்ப்புகள் உள்ளது. சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூரும் அணியில் இணைகின்றனர். அதே நேரத்தில் உம்ரான் மாலிக், விசா சிக்கல் காரணமாக ஆஸ்திரேலியா செல்லவில்லை என சொல்லப்படுகிறது.