மும்பை அணியுடன் இன்று மோதல்: சென்னையின் வெற்றிப் பயணம் தொடருமா?- பயிற்சியாளர் மெட்டராசி அச்சம்

மும்பை அணியுடன் இன்று மோதல்: சென்னையின் வெற்றிப் பயணம் தொடருமா?- பயிற்சியாளர் மெட்டராசி அச்சம்
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் ஜான் ஆர்னே ரீசே, ஹன்ஸ் முட்லர் ஆகியோர் காயமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் 2 கோல் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றால் முதலிடத்துக்கு முன்னேறலாம்.

மும்பை அணியுடன் இதுவரை மோதிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த சீசனில் வரலாறுகள் மாறி வருகின்றன. சென்னை மற்றும் கோவா அணிகள் மோதிய ஆட்டங்களில் உள்ளூர் அணி வென்றதே இல்லை. ஆனால் இம்முறை சென்னை அணி உள்ளூரில் கோவாவை வென்றது.

இதுவரை கோவாவுடனான 4 போட்டிகளிலும் தோற்றிருந்த டெல்லி டைனமோஸ் அணி, இந்த சீசனில் அபாரமாக வென்றது. இதனால் மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மார்க்கோ மெட்டராசி அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஒவ்வொரு வருடமும் அனைத்தும் மாறும். ஒவ்வொரு ஐஎஸ்எல் தொடரும் முந்தைய தொடரிலிருந்து மாறுபட்டதுதான். ஆனால் இந்த சீசனில் எல்லாம் தலைகீழாக நடப்பதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது.

உள்ளூரில் தோற்று வந்த கோவா அணியை வென்றதனால், வழக்கமாக வெற்றி பெறும் மும்பை அணியுடனான போட்டியால் சற்று அச்சம் எழுந்துள்ளது. இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. அரையி இறுதிக்கு முன்னேறுவது மட்டுமே எங்களுடைய இலக்கு’’ என்றார்.

இந்த சீசனில் மும்பை அணி மெதுவாக முன்னேறி வருகிறது. கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிமாரஸ், வீரர்களிடையே வெற்றி மனப் பான்மையை விதைத்துள்ளார். அவர் கூறும்போது, “நான் மிகவும் மாறுபட்ட அணியைக் கொண்டிருக்கிறேன். இந்த அணியில் உள்ளவர்களுக்கு பழைய தோல்வியின் நினைவுகள் இருக்காது. இது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை. நடப்பு சாம்பியனை எதிர்கொள்கி றோம் என்பது எங்களுக்கு தெரியும்.

நட்சத்திர வீரர் டீகோ போர்லான் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார். அவர் விளையாடுவதைக் காண்பது ஒரு அற்புதமான உணர்வு. போர்லான் சிறப்பாக விளையாடும் போது நாங்கள் வெற்றி பெறுகிறோம். அவர் கோல் அடிக்கிறார். அல்லது கோல் அடிக்க உதவுகிறார். எதிரணிகள் அவரை எச்சரிக்கையோடு எதிர்கொள்கின்றனர். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லது’’என்றார்.

மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் அந்த அணி முதலிடத்துக்கு முன்னேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in