

புவனேஷ்வர்: ஃபிபா மகளிர் யு 17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புவனேஸ்வரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.
ஃபிபா மகளிர் யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் 0-8 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மொரோக்கோவுடன் மோதுகிறது.
இந்த ஆட்டமும் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கக்கூடும். மொரோக்கோ அணியானது ஆப்பிரிக்க தகுதி சுற்றில் கானா அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வென்று உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருந்தது.
இந்திய அணி தொழில்நுட்ப ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலம் வாய்ந்த அமெரிக்க அணியிடம் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் சரணடைந்தது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மொராக்கோவிற்கு எதிராக சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடும். இந்திய அணி முதன்முறையாக புள்ளிகளை பெறுவதற்கு இன்றைய ஆட்டம்சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பலம்வாய்ந்த பிரேசில் அணியை சந்திக்க உள்ளது. முதல் ஆட்டத்தில் உயரமான மற்றும் வலிமையான அமெரிக்க வீராங்கனைகள் கார்னர் கிக்-களில் இருந்து பல கோல்களை அடித்தனர். இதனால் இந்த பகுதியில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
மொராக்கோ தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டிருந்தது.அந்த ஆட்டத்தில் மொரோக்கோஅணி பெரும்பாலான நேரங்களில்தற்காப்பு ஆட்டத்தையே மேற்கொண்டது. 4 முறை இலக்கை நோக்கி அந்த அணி பந்தை கொண்டு சென்ற போதும் அவற்றில் ஒன்றை கூட கோலாக மாற்ற முடியாமல் போனது.