

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி – பெங்களூரு எப்சி மோதுகின்றன.
சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஏடிகே மோகன் பகான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. அதேவேளையில் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்தியிருந்தது.
சென்னை அணியின் கேப்டன் அனிருத் தாபா கூறும்போது, “இரு வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட உள்ளோம். இது சிறந்த உணர்வை கொடுக்கிறது. சொந்த மைதானம், வெளியூர் மைதானங்களில் விளையாடும் சாதக, பாதகங்களை நாங்கள் கடந்த சீசன்களில் பார்த்துள்ளோம். இம்முறை ரசிகர்கள் மைதானத்துக்கு திரும்பி வருவது எங்களுக்கு சாதகமான விஷயம்” என்றார்.
ஐஎஸ்எல் தொடரில் சென்னையும், பெங்களூரு அணியும் 11 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது. பெங்களூரு அணி 7 முறை வெற்றி கண்டிருந்தது. இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன.