Published : 13 Oct 2022 03:49 PM
Last Updated : 13 Oct 2022 03:49 PM

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வி: ஆறுதல் தந்த அஸ்வின், ராகுல்

கே.எல்.ராகுல் (படம்: பிசிசிஐ).

பெர்த்: மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி இருந்தார். கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி ஆறுதல் கொடுத்திருந்தார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடியது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. ஹாப்சன் மற்றும் ஷார்ட் என இருவரும் அரை சதம் விளாசி இருந்தனர். இந்திய பவுலர் அஸ்வின், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அர்ஷ்தீப் சிங், 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டிருந்தார்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. பந்த், ஹூடா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகள் இழந்தனர். இதில் ராகுல் 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை தழுவியது.

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் சஹால் ஆகியோருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி அடுத்ததாக வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக வாரம்-அப் போட்டியில் விளையாட உள்ளது. தொடர்ந்து வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x