Published : 13 Oct 2022 01:14 PM
Last Updated : 13 Oct 2022 01:14 PM

T20 WC அலசல் | சொதப்பும் பிஞ்ச், மேக்ஸ்வெல்; 3 ஆண்டாக தடவும் ஸ்மித்... - தேறுமா ‘சாம்பியன்’ ஆஸ்திரேலியா?

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்று இழந்த பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை, அதுவும் தங்கள் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா 2-0 என்று இழந்துள்ளது. ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டர் மிகவும் நம்பகத்தன்மையுடன் இல்லை. டி20 உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, அதை தக்கவைப்பது மிக மிகக் கடினம் என்றே அந்த அணியின் சமீபத்திய ஆட்டங்கள் நமக்கு தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக முதல் டி20-யில் இந்தியா எடுத்த 208/6 என்ற மிகப் பெரிய இலக்கை ஆஸ்திரேலியா, கேமரூன் கிரீன் (61), மேத்யூ வேட் (45) ஆகியோரது அதிரடியினாலும் புவனேஷ்வர் குமாரின் மோசமான ‘டெத்’ ஓவரினாலும் 211/6 என்று வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

பிறகு 2-வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு 8 ஓவர்களே நடைபெற்றது. இதிலும் மேத்யூ வேட் (43) விளாச 90/5 என்று ஆஸ்திரேலியா முடிய, இந்திய அணி ரோஹித் சர்மா (46) அதிரடியில் 7.2 ஓவர்களில் 92/4 என்று இலக்கை ஊதியது. பிறகு, ஹைதராபாத்தில் நடைபெற்ற பரபரப்பான மூன்றாவது போட்டியில் கேமரூன் கிரீன் (52), டிம் டேவிட் (54), டேனியல் சாம்ஸ் ( 28) ஆகியோரின் அதிரடியில் 186/7 என்று பெரிய இலக்கை எடுத்தது. ஆனால், இந்திய அணியில் எவர் கிரீன் விராட் கோலி 48 பந்துகளில் 63 விளாச, புதிய 360 டிகிரி வீரர் சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 69 எடுக்க, ஹர்திக் பாண்டியா 25 ரன்கள் எடுத்து பினிஷர் ரோலை சரியாகச் செய்ய இந்தியா 19.5 ஓவர்களில் 187/4 என்று தொடரை வென்றது.

கேப்டன் ஏரோன் பிஞ்ச் பிரச்சினை: இப்போது இங்கிலாந்துக்கு எதிராக முதல் 2 போட்டிகளிலேயே 2-0 என்று உதை வாங்கி ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியுள்ளது. ஆஸ்திரேலியா அணியில் பவுலிங்கில் நிறைய தெரிவுகள் உள்ளன. அதில் பிரச்சனை இல்லை. ஹேசில்வுட், கமின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஜாம்ப்பா, ஜோஷ் இங்லிஸ், ஸ்டாய்னிஸ் என்று பெரிய படையே உள்ளது. ஆனால், பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியில் பெரிய பலம் இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்குக் காரணம் கேப்டன் ஏரோன் பிஞ்ச், அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவதும், ஸ்டீவ் ஸ்மித்தின் இடமே கேள்விக்குறியாகி இருப்பதும்தான். பிஞ்ச் தான் எந்த டவுனில் இறங்க வேண்டும் என்பதிலேயே குழம்பிப் போய் மிடில் ஆர்டரில் இறங்குகிறார், பிறகு ஓப்பனிங்கில் நேற்று இறங்கி 13 ரன்களில் வெளியேறினார். ஏரோன் பிஞ்சின் கடைசி 10 இன்னிங்ஸ் ஸ்கோர் படிப்படியாக குறைந்து வருவதைப் பார்க்கலாம்: 61, 24, 29, 22, 31, 7, 58, 15, 12, 13. ஆஸ்திரேலியாவில் கேப்டன், அணி வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். இப்போதைக்கு பிஞ்சிடம் அது இல்லை. அவரும் உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறவிருக்கிறார்.

கிளென் மேக்ஸ்வெல் சொதப்பல்: ஆஸ்திரேலியாவுக்கு பல ஒருநாள், டி20 போட்டிகளை வென்று கொடுத்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஃபார்ம் மிகப்பெரிய கவலையாக ஆஸ்திரேலியாவுக்கு மாறியுள்ளது. நேற்று 8 ரன்களில் சாம் கரன் வீசிய 131 கிமீ பவுன்சருக்கே ஆடிப்போய் கேட்ச் ஆகி வெளியேறினார். கடந்த 6 டி20 சர்வதேசப் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் எடுத்த மொத்த ஸ்கோர் வெறும் 16 மட்டுமே. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிளென் மேக்ஸ்வெல் கடந்த 12 இன்னிங்ஸ்களில் 108 ரன்களையே எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி டாப் ஆர்டரில் டேவிட் வார்னரையும் பின் வரிசையில் டிம் டேவிட்டையும் மட்டுமே நம்பியுள்ளது. இடையில் மிட்செல் மார்ஷ் பெரிய ஷாட்களை ஆடினார். நேற்றும் அவர் பிரமாதமாக ஆடினார். அதுவும் டாப்லியை வந்தவுடனேயே லாங் ஆன் மேல் அடித்த சிக்ஸ் அபாரமாகவே இருந்தது. அதன் பிறகு ஒரு கிளாசிக் கவர் ட்ரைவ் என்று அட்டகாசமாக ஆடினார். ஆனால், ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் 2020-ல் இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று ஆடிய தொடரிலிருந்தே சரியான ஃபார்மில் இல்லை. அவரது ஸ்கோரை அந்தத் தொடரிலிருந்து பார்த்தோமானால் 12, 46, 24, 35, 28, 5, 9, 14, 5, 37, 35, 8,9, 17 என்று உள்ளது. அவர் இறங்கும் டவுனுக்கு இந்த ஸ்கோர் போதாது. விராட் கோலி சதம் எடுத்து ஆயிரம் நாட்கள் ஆகிறது என்று கூறுகிறோம். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக டி20-யில் அரைசதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது, ஆம்! கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக கன்பெராவில் 80 நாட் அவுட் என்று அரைசதம் எடுத்ததோடு சரி.

மேலும், இவரும் கோலி போலவே ரன்களை ஒன்று, இரண்டு, தளர்வான பந்துகளில் பவுண்டரி, சிக்ஸ் என்று ரன்களைச் சேர்ப்பவர்; பிக் ஹிட்டர் அல்ல. இப்போது டி20 போட்டிகளில் பிக் ஹிட்டர்களுக்குத்தான் மதிப்பு. இங்கிலாந்தில் வரிசையாக பிக் ஹிட்டர்களாகவே இறங்குகின்றனர். ஆஸ்திரேலியாவில் அந்த மாதிரியான வீரர்கள் டிம் டேவிட் தவிர வேறு யாரும் டாப் ஆர்டரில் இல்லை. டிம் டேவிட், மிட்செல் மார்ஷ் போன்றவர்கள் பிக் ஹிட்டர்கள்தான். ஆனால் சீரான முறையில் தொடர்ச்சியாக நல்ல ரன்களை எடுப்பதில்லை.

ஆஸ்திரேலியா பவுலிங் பிரமாதமாக உள்ளது. அது எப்பவும் போல் எல்லா வடிவங்களிலும் உலகத்தரம் வாய்ந்ததாகவே உள்ளது. எனவே, ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 175-180 ரன்களைத் தேற்றி, பிறகு பவுலிங்கில் எதிரணியினரை முடக்கி வென்றால்தான் உண்டு. ஃபீல்டிங்கும் முன்னைப்போன்று கூர்மையாக இல்லை. கேட்ச்களை தவறவிடுகின்றனர்.

டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணிக்கு இந்த டி20 உலகக் கோப்பை மிக மிகக் கடினமே. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் 2 அணிகள் தகுதி பெறும் குரூப்பில் ஆஸ்திரேலியா உள்ளது. உலகக் கோப்பைகளில் நியூசிலாந்து அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியில் புதிய உத்வேகம் புகுந்தாலே தவிர, உலகக் கோப்பையை வெல்வது கடினமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x