

பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் இஃப்திகார் அகமது, முன்னாள் இந்திய கேப்டன் தோனியை போல விளையாடுகிறார். ஆனால் தோனி வசம் உள்ள அந்த ஒரு திறன் இஃப்திகார் அகமதிடம் இல்லை என தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சையது அஜ்மல். அவரது இந்த ஒப்பீடு புலி மேலையும் கோடு இருக்கு, பூன மேலையும் கோடு இருக்கு என்ற வகையில் உள்ளது.
“இஃப்திகார் அகமது, தோனியை போல விளையாடுகிறார். ஆனால் இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு சாதகமாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் தோனியை போல அவரது ஆட்டம் அமையவில்லை. வழக்கமாக தோனி சிங்கிள் எடுப்பார். அதே நேரத்தில் இறுதி ஓவர்களில் சிக்ஸர் விளாசி அதை ஈடு செய்வார். பாகிஸ்தான் அணியிலோ இஃப்திகார் முதல் பத்து பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டாட் பால்களாக ஆடுகிறார். அதற்கு ஈடு செய்யும் வகையில் பெரிய ஷாட் ஆடும் போது விக்கெட்டை இழக்கிறார். இதையே தான் ஷான் மசூதும் செய்கிறார். 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆகிறார்” என விமர்சித்துள்ளார் அஜ்மல்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்த ரன்களை இஃப்திகார் அகமது எடுத்திருந்தார். அதை தான் அஜ்மல் விமர்சித்துள்ளார். 34 டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 123.80.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரில் நடுவரிசையில் பேட் செய்யும் வீரர்கள் கொஞ்சம் சுமாராகவே விளையாடுகின்றனர் என்ற பேச்சு உள்ளது. அந்த அணி டாப் ஆர்டரில் ஆடும் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமையும் பெரிய அளவில் நம்பி உள்ளது. நடுவரிசையில் ஆடும் ஷான் மசூத், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி போன்ற வீரர்கள் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை விளையாட தவறுகின்றனர்.