Published : 12 Oct 2022 06:58 AM
Last Updated : 12 Oct 2022 06:58 AM

பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி - 18-ல் அறிவிப்பு வெளியாகிறது

ரோஜர் பின்னி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளார்.

பிசிசிஐ-யின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.

இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜெய் ஷா 2-வது முறையாக செயலாளராக தொடர உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா பிசிசிஐ-யின் துணைத்தலைவராக நீடிக்க உள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்குரின் சகோதரர் அருண் சிங் துமால், ஐபிஎல் அமைப்பின் சேர்மனாக தேர்வாக உள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நெருங்கிய உதவியாளரான தேவஜித் சைகியா இணைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

வரும் 18-ம் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். மிதவேகப்பந்து வீச்சாளரான ரோஜர் பின்னி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவர், 8 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வேட்டையாடி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x