

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பள்ளி படித்தபோது தான் ஒரு சராசரியாக படிக்கும் மாணவன் என்றும், தான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என தனது தந்தை எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இதனை பகிர்ந்திருந்தார்.
இந்த நிகழ்வில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவரிடம் பள்ளி வாழ்க்கை குறித்து கேட்கப்பட்டது. அப்போதுதான் இந்த நினைவை பகிர்ந்துள்ளார் அவர். ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி உள்ளார்.
“நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற மாட்டேன் என என் அப்பா நினைத்தார். அவர் அதனை கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டார். நான் மீண்டும் தேர்வு எழுத வேண்டி இருக்கும் என எண்ணி இருந்தார். ஆனால், நான் தேர்ச்சி பெற்றேன். அப்பா ஹேப்பி ஆனார்.
நான் ஏழாம் வகுப்பு முதல் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். எனது அட்டெண்டென்ஸ் சரிந்தது. படிப்பில் நான் சராசரி மாணவன்தான். பத்தாம் வகுப்பில் 66 சதவீதம் பெற்றேன். 12-ம் வகுப்பில் 56 அல்லது 57 சதவீதம் எடுத்தேன்.
நான் எந்த பள்ளிக்கு சென்றாலும் எனக்கு அது டைம் மெஷினில் பயணிப்பது போல இருக்கும். அந்த தருணத்தில் நான் எனது பள்ளி நாட்களில் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி பார்ப்பேன். நம் எல்லோர் வாழ்விலும் சிறந்த நாட்கள் அது என நினைக்கிறேன். படிப்பு, விளையாட்டு என அந்த நாட்கள் இருக்கும். அதெல்லாம் திரும்ப வரவே வராது. அந்த நாட்களின் நீங்கா நினைவுகள் நம் நெஞ்சுக்குள் என்றென்றும் பசுமையாக இருக்கும். பள்ளி நாட்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிப்பார்கள்” என தோனி தெரிவித்துள்ளார்.