Published : 11 Oct 2022 05:59 AM
Last Updated : 11 Oct 2022 05:59 AM

ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வெல்வது யார்? - தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி இன்று மோதல்

புதுடெல்லி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டத்தில் 279 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரது அபாரமான பேட்டிங்கால் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இதனால் ஒருநாள் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரைவெல்வது யார்? என்பதை தீமானிக்கும் விதமாக அமைந்துள்ள 3-வது ஆட்டத்தில் இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பிற்பகல் 1.30 அணி அளவில் டெல்லியில் மோதுகின்றன. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியிருந்தது. இருப்பினும் தொடக்க வீரர்களான ஷிகர் தவண், ஷுப்மன் கில் ஆகியோரிடம் இருந்து இரு ஆட்டங்களிலும் பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் சீரான திறனை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவண், இந்தத் தொடரில் 17 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதை கவனத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவண் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும்.

ஷுப்மன் கில் முதல் ஆட்டத்தில் 3 ரன்களில் நடையை கட்டிய நிலையில் 2-வது ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங்கை தொடங்கிய போதிலும் அதை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார். எதிர் காலங்களில் தனது இடத்தை அணியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் தொடரை வெல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள இன்றைய ஆட்டத்தில் ஷுப்மன் கில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியாக வேண்டும்.

தொடக்க ஜோடி சிறப்பாக செயல்படாத நிலையில் இந்திய அணின் நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர். பந்து வீச்சில் மொகமது சிராஜூடன் சுழற்பந்து வீச்சாளர்களான ஷாபாஸ் அகமது,ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர். இவர்கள் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசைக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

இந்திய அணியை போன்று 2-ம் கட்ட வீரர்கள் அல்லாமல் தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் முழுபலம் கொண்ட அணியாக விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு, ஐசிசி தரவரிசையில் 11-வதுஇடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி நேரடியாக தகுதி பெற வேண்டுமானால் கணிசமான வெற்றிகளை குவித்து புள்ளிகளை பெற வேண்டும் என நெருக்கடியில் உள்ளது.

இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடியமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x