

தம்மம்: யு 17 ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் (95-வது நிமிடம்) தங்கல்சூன் காங்டே கோல் அடித்தார். லீக் சுற்று முடிவில் இந்திய அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தது.
கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்த போதிலும் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற 10 குழுக்களில் இரண்டாவது இடத்தை பிடித்த சிறந்த 6 அணிகளில் ஒன்றாக இந்தியா இடம்பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடைபெறும் யு 17 ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு விளையாட தகுதி பெற்றது. தகுதி சுற்று தொடரில் இந்திய அணி 5-0என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகளையும், 3-0 என்ற கோல் கணக்கில் குவைத்தையும், 4-1 என்ற கோல் கணக்கில் மியான்மரையும் தோற்கடித்திருந்தது.